Monday, November 30, 2015

திமுக தலைவர் கலைஞரின் கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி :- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த மத்தியக் குழுவினர், பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கே செல்லவில்லையே?

கலைஞர் :- தமிழக அரசின் சார்பில் எந்தெந்த பகுதிகளைப் பார்வையிட வேண்டுமென்று தெரிவித் தார்களோ, அந்தப் பகுதிகளிலேதான் மத்திய குழுவினர் பார்வையிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மாநில அரசு மீது சரமாரி யான புகார்களை அங்குள்ள பொதுமக்கள் தெரிவித் திருக்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஆர்.கே. நகர் தொகுதியிலேயே நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்றும்,  அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

 பொதுமக்கள் இப்படிப்பட்ட புகார்களைக் கூறுவதைத் தடுத்த தமிழக அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி மன்ற அதிகாரி களும், மத்தியக் குழுவினரை அங்கிருந்து விரைவாக அழைத்துச் சென்று விட்டார்களாம்.  ஆங்காங்கு காத்திருந்த மக்கள் பிரதிநிதிகளைக்கூடச் சந்திக்க வில்லையாம். அண்மையில் பெய்த பெருமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகை, தூத்துக்குடி மாவட்டங்களும் அடங்கும். ஆனால் மத்தியக் குழுவினர் அந்த மாவட்டங் களுக்குச் செல்ல வில்லை.

இதைப்பற்றி செய்தியாளர்கள் ஏன் அங்கே செல்லவில்லை என்று கேட்ட போது, தமிழக அரசு வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே எங்களது பயணம் அமைந்தது என்று பதிலளித் திருக்கிறார்கள். தென் மாவட்டங்கள் மீது தமிழக அரசுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

பிரதமரோ பேசிய போது  தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், மத்தியக் குழுவின் அறிக்கை வந்த பிறகு போதுமான நிதி எவ்வளவு என்று அறிவிக்கப்படும் என்றும்  தெரிவித்திருக்கிறார். எனவே  தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரண உதவிகளைப் பெறுவதில் அலட்சியமும் காலதாமதமும் செய்யாமல், உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, தேவைப்பட்டால் முதலமைச்சரே டெல்லி சென்று நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதிக நிதியைப் பெற்று, அதனை முறையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்திடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். நிவாரண நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது;  ஆங்காங்கே அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் அமைத்து, குழுவினர் முன்னிலையிலேயே நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஒவ்வொரு ஊராட்சியிலும்  நிவாரண நிதி பெறுவோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட வேண்டும்;  நிவாரண நிதி வழங்குவதை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக ஆளுங்கட்சி கருதிச் செயல்படக் கூடாது.

கேள்வி :- சென்னை மாநகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து இளம் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாகவும்,  அவரை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை சாக்கடையில் வீசியிருப்பார்களா என்று விசாரணை நடந்து வருவதாகவும் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- சென்னை மாநகரில் சாக்கடைகள் கழிவுகளைத் தான் அள்ளிச் செல்லும் என்று நினைத்த தற்கு மாறாக, மனித உயிர்களையும் அவ்வப்போது அள்ளிச் செல்கின்றன என்பது இந்த ஆட்சியிலேதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   இந்தச் செய்தியை அனைத்து நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.  குறிப்பாக "சண்டே-டைம்ஸ்" நேற்று வெளியிட்டுள்ள செய்திக்கு தலைப்பே, “A Tragic  Reminder and a Warning - Woman’s body fished out from manhole in City” என்பதாகும்.  இருபது நாட்களாக ஒரு பெண்மணி காணப்படவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கூறப்பட்ட பிறகும், அவருடைய வீட்டிற்கு மிக அருகிலே உள்ள இந்தச் சாக்கடை புதைகுழியில் தேட வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை. தற்போதுகூட, அந்தப் பகுதியிலே உள்ள மக்கள் சாக்கடை கழிவுகள் பொங்கி வழிவதாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி, அதைப் பற்றிக் கவனிப்பதற்காக வந்தவர்கள் கழிவு களை அகற்றிட முனைந்த போது, அந்தப் பெண்ணின் உடல் வெளியே வந்துள்ளது. 

கேள்வி :- உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்த, ஜப்பான் நாட்டுத் தமிழறிஞர், நொபுரு கரஷிமா மறைந்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக 1989ஆம் ஆண்டிலிருந்து  2010ஆம் ஆண்டு வரை சிறந்த பணியாற்றிய தமிழறிஞர் நொபுரு கரஷிமா மறைந்த செய்தி அறிந்து நான் பெரிதும் வருந்தினேன். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சென்னையில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது   35 வயது இளைஞராக வந்து கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நொபுரு கரஷிமா அவர்கள். நீண்ட காலத் திற்குப் பயன்படும் சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் நொபுரு கரஷிமா. அவருடைய மறைவு உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

கேள்வி :- சத்துணவுத் திட்டத்தின்கீழ்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையிலேகூட இந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- சொல்லப்படுகிறதா? அது குறித்து ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கே தாக்கல் செய்திருக்கிறார்.  தி.மு. கழக ஆட்சியின் போது மாவட்டத்திற்கு மாவட்டம், முட்டை வழங்குவதற்காக முறைப்படி "டெண்டர்" கோரப்பட்டு, பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு, எவ்வித இழப்பும் ஏற்படாமல் நடைபெற்று வந்தது.  ஆனால் இந்த ஆட்சியில் 2014ஆம் ஆண்டு ஏப்ரலில்,  பலருக்கும் கிடைத்த வாய்ப்புகளைத் தடுத்து,  தமிழகம் முழுவதற்கும் ஒரே ஒருவருக்கு வாய்ப்பு தரப்பட்டு பலருடைய வாய்ப்பைக் கெடுத்தார்கள்.  பலரிடம் "கமிஷன்" வாங்குவதைவிட ஒருவரிடம் மட்டும் வாங்கிக் கொள்வது எளிதான காரியம்  என்று எண்ணி விட்டார்கள் போலும்! அந்த ஒருவரிடமாவது குறைந்த விலையில் முட்டை வாங்கினார்களா என்றால் அதுவும் இல்லை.  பொதுவாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையிலே தான் தமிழக அரசு ஏற்கனவே முட்டைகளைக் கொள்முதல் செய்தது.  மாநிலம் முழுவதற்கும் தற்போது முட்டை வழங்கும் ஒரே ஒரு நிறுவனம் என்ன விலைக்கு வழங்குகிறது என்றால் ரூ. 4.35 என்ற விலையில் தருகிறது.  ஆனால் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி, ஒரு முட்டையின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ. 2.97 என்றும், அக்டோபரில் ரூ. 3.10 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.  சில பேர் தனிப்பட்ட முறையில் இலாபம் சம்பாதிப்பதற்காக அரசு பணம் கூடுதலாக  முட்டை வாங்குதலில் விரயமாகிறது.  கடந்த செப்டம்பர், அக்டோபரில் மட்டும் அரசுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு என்றும்,  கடந்த ஆண்டு மட்டும் அரசுக்கு இதன் காரணமாக 120 கோடி ரூபாய் இழப்பு என்றும் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததோடு, தாங்கள் ஒரு முட்டையை 2.97 ரூபாய்க்கே வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று தமிழக அரசிடம் ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. இது சாதாரண முட்டையில் நடைபெற்ற ஊழல். முட்டையிலே இவ்வளவு என்றால், இன்னும் விலையில்லா பொருள்களான மடிக்கணினி, மின் விசிறி, கிரைண்டர் என்று ஒவ்வொன்றிலும் எவ்வளவு என்று கணக்கிட்டால் உண்மைகள் உலகத்திற்கு தெரியும்!

கேள்வி :- ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரிகளில் சிலர் அ.தி.மு.க.வினராகவே மாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- தற்போது பெய்து வரும் மழை பற்றி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அந்த மாவட்ட ஆட்சியர், வி. சம்பத், ஐ.ஏ.எஸ்., "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் மழை அதிகமாகப் பெய்துள்ளது" என்று கூறியிருக்கிறார். சட்டப்பேரவை யில் இருக்கும் அதிகாரி பற்றி அந்தத் துறையில் ஒரு பெண் அலுவலர்  உயர் நீதிமன்றத்திலேயே புகார் மனு தாக்கல் செய்திருக்கிறார்.  ஆனால் அ.தி.மு.க. அரசு அந்த அதிகாரிக்கு  ஐந்தாண்டு காலத்திற்கு பதவி நீடிப்பு வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, மேல் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலையே செய்து கொண்ட சம்பவமும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது. 

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை யெல்லாம் கூட காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைப்பதாகச் செய்தி வருகிறதே?

கலைஞர் :- என்ன செய்வது? அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அன்றாடம் முதலமைச்சர் எதையாவது திறந்து வைத்ததாக செய்தி வர வேண்டியிருக்கிறதே? பேரவை நடந்தாலாவது, 110வது விதியின் கீழ் எதையாவது எழுதி வைத்து படிக்கச் சொல்லலாம். இப்போது என்ன செய்வார்கள்? ஒரு கோடி ரூபாய் மதிப்பில்கூட அல்ல, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள  2 உதவி வனப் பாதுகாவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்திருக்கிறார் என்றால், ஒரு குடியிருப்பின் மதிப்பீடு  13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்தான்!  அதைத் திறந்து வைத்து முதலமைச்சர் பெயரில் ஒரு கல்வெட்டு இருக்க வேண்டும்!   அதைப்போல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களையெல்லாம் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கத் தொடங்கி விட்டார். எதையாவது திறந்து வைத்தாக வேண்டுமே?  என்ன செய்வது?  ஏதாவது புகைப்படம் ஏடுகளில் தினந்தோறும் வந்தாக வேண்டுமே?  அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.  இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் "போட்டோ" வுக்கு "போஸ்" கொடுக்கத் தவறுவதில்லை! அவர் களுக்கும் இந்த ஆட்சியில் அதுதான் வேலை போலும்! என்னமோ நடக்குது;  ஒன்றுமே புரியலே!  இதுக்கும் அரசாங்கம் என்றுதான் பெயர்!

கேள்வி :- தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்ததாக,  முதலமைச்சர் ஜெயலலிதாவை, தைவான் நாட்டில்  நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு இங்கிருந்து சென்றவர்கள் பாராட்டியிருக்கிறார்களே, அந்தக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு களைக் குறிப்பிட முடியுமா?

கலைஞர் :- இதே கேள்வியை பொள்ளாச்சியைச் சேர்ந்த பா. ஜெயப் பிரகாஷ் என்பவர் "நக்கீரன்" இதழில் கேட்டு, அதற்கு "மாவலி" இந்த வாரம் அளித்த பதில் என்ன தெரியுமா? "2011இல் ஆட்சிக்கு வந்ததுமே பாவேந்தர் செம்மொழி நூலகத்தை  சிதைத்தது -  தமிழ்நாடு என இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய அண்ணாவின் பெயரிலான நூலகத்தை முடக்க நினைத்தது -  மறைமலையடிகள், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்கள் கணித்த தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் புறக்கணித்தது - அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கான வாய்ப்புகளைக் குறைத்து, ஆங்கில வழிக் கல்விக்கு ஊக்கம் தந்தது எனப் பல பங்களிப்புகளைக் குறிப்பிடலாம்"  என்பதாகும். பள்ளிப் பாட நூல்களில்  திருவள்ளுவர் படத்தை மறைத்ததையும், செம்மொழித் தமிழாய்வு மாநாட்டின் மைய நோக்க விளக்கப் பாடலை நீக்கியதையும் இணைத்துக் கொள்ளலாம்.

கேள்வி :- வெள்ள நிவாரண நிதியாக தி.மு.கழகம் அளித்த ஒரு கோடி ரூபாயைப் போலவே  திரைப்படத்துறையைச் சார்ந்த நண்பர்கள் சிலரும் நிதி அளித்திருக்கிறார்களே?

கலைஞர் :- தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கோரி ஒரு கோரிக்கை அறிக்கை முதலமைச்சர் பெயராலோ அல்லது தமிழக அரசின் பெயராலோ இதுவரை வந்திருக்க வேண்டும்.  அப்படி வந்திருந்தால் இதற்குள் ஏராளமான நிதி வந்திருக்கும்.  ஆனால் என்ன காரணத்தாலோ இந்த அரசு அதிலே அக்கறை இல்லாமல் இருக்கிறது. வேறு எதில்தான் அக்கறையாக இருக்கிறது என்று என்னைத் திரும்பக் கேட்டு விடாதீர்கள்!

கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை தாக்கியவர்களை விட்டு விட்டு, தாக்கப்பட்ட வர்கள் மீதே நடவடிக்கை எடுக்கிறதே?

கலைஞர் :- என்ன செய்வது?  தாக்கியவர்கள் ஆளுங்கட்சிக்காரர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்?  தே.மு.தி.க. சார்பில் கடந்த வாரம்  சென்னை மேற்கு மாவட்ட தொண்டர்கள்,  சென்னை மாநகராட்சியின் துணை ஆணையரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுக்கச் சென்ற போது, அவர்களை வழி மறித்து  ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையிலே உள்ள குழுவினர் கடுமை யாகத் தாக்கி அனைத்து நாளேடுகளிலும் அந்தச் செய்தி பெரிதாக வந்தது.  ஆனால் இந்த அரசு  பாதிக்கப்பட்ட தே.மு.தி.க.  தொண்டர்கள் மீதே பொய் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுத்தது.  அந்த அளவுக்கு அராஜகம் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றது! பாதிக்கப்பட்டவர்கள் மீதும், புகார் கொடுக்கப் போகிறவர்கள் மீதும் வழக்கு தொடுப்பதை அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கமாக்கி வழக்கு தொடுப்பதில் புதிய பாணியைக் கொண்டு வந்து, குற்ற வழக்கு நடைமுறைகளையே  தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer