Saturday, November 28, 2015

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரஃப் மீதான தேசத்துரோக வழக்கை மீண்டும் விசாரிக்க அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ஆம் திகதிக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்யவும், அந்நாட்டின் மத்திய விசாரணைக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய விசாரணையை மேற்கொள்ளும் குழுவில், இராணுவ உளவு அமைப்புகளின் அதிகாரிகளும் இடம்பெற வேண்டும் என்று பர்வேஸ் முஷாரஃப் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2007ஆம் ஆண்டு அரசமைப்பு சட்டத்துக்குப் புறம்பாக நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியதாக, முன்னாள் இராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரஃப் தேசத் துரோக வழக்கை எதிர்கொண்டு வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடந்த 2013ஆம் ஆண்டில் அமைத்திருந்தார்.

பாகிஸ்தானின் 1973ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின்படி, அதற்குப் புறம்பாக செயல்படுவது, மிகப்பெரிய தேச துரோகம் ஆகும். இக்குற்றத்துக்கு, மரண தண்டனை விதிக்கக் கூட, அந்நாட்டுச் சட்டத்தில் இடமுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer