Sunday, November 29, 2015

காங்கிரஸ் எம்எம்ஏவும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும் உள்ள விஜயதாரணியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று 49 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று அக்கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இருந்த பெருமையை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் நவம்பர் 1, 2014 அன்று நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டு காலமாக காங்கிரஸ் இயக்கத்திற்கு புத்துணர்ச்சி வழங்கி வலிமையை ஏற்படுத்துகிற வகையில் பல்வேறு கட்சி நடவடிக்கைகளை ஓய்வு ஒழிச்சலின்றி தொடர்ந்து செய்து வருகிறார்.

தமது முழு சக்தியையும் பயன்படுத்தி இயக்கப் பணியாற்றி வருகிற இளங்கோவன் மீது பல்வேறு அவதூறு வழக்குகளைத் தொடுத்து கடுமையான அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கொள்வதில் தமிழக காங்கிரஸ் கட்சி என்றுமே தயங்கியதில்லை. ஆனால், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத ஒருசிலர் இளங்கோவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கட்சியை இழிவுபடுத்துகிற பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவனிடம் முறையிட்டபோது நடந்து கொண்ட முறையை எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது. எவர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கானபுகாரை தாங்கள் வழங்கினால் பரிசீலிப்பதாக இளங்கோவன் கூறினார். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அராஜகப்போக்கோடு வலியுறுத்திக் கூறியது மிகவும் வேதனைக்குரியது. இயல்பாகவே எவரையும் துச்சமென நினைத்து மதிக்காத ஆணவப்போக்கு கொண்டு விஜயதாரணி கட்சிக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் செயல்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மேற்கூறப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பேசாததை எல்லாம் பேசியதாக இட்டுக்கட்டி மகிளா காங்கிரசைச் சேர்ந்த சாந்தி ஸ்ரீனி, மானசா பாத்திமா ஆகியோர் காவல்நிலையத்திற்குச் சென்று கிரிமினல் புகார் கொடுத்ததைவிட கட்சி விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இளங்கோவன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலமாக கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் காவல்துறையை நாடியதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்தவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்ட பெரியாரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் இளங்கோவன் பெண்ணினத்தை இழிவுபடுத்தினார் என்று சொல்வதைவிட அப்பட்டமான அவதூறு வேறு இருக்க முடியாது. எதற்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிற விஜயதாரணியை மகிளா காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும்.

காங்கிரஸ் இயக்கத்தின் கலாச்சாரத்திற்கு இழுக்கு தேடுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமே தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக கட்சி வளர்ச்சிக்காக செய்த உழைப்புகள் விழலுக்கு இறைந்த நீராக வீணாகிவிடுமோ என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது.

எனவே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரசில் நிலவி வருகிற ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு காரணமான விஜயதாரணி உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்சியில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

(மொத்தம் 61 மாவட்டங்களில் 49 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டறிக் வெளியிட்டுள்ளனர்). இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer