Monday, November 30, 2015

மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர்.

மும்பை சத்ரபதி விமானநிலையத்தின் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே( 37).

இவரது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 28-ம் திகதி விமான நிலையத்தின் கழிவறை பேசின் ஒன்றில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன.

ஒரு மோதிரத்தின் விலை ரூபாய் 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன் விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று அதனை பத்திரமாக ஒப்படைத்தார்.

அதே வேளையில் விமானத்தில் ஏற சென்ற பெண் பயணி ஒருவர், தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரங்களை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் இமெயில் வழியாக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆதாரங்களை உறுதி செய்தபின் உடனடியாக அதே விமானத்தில் வைத்து, பெண் பயணியிடம் 4 மோதிரங்களும் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் வைர மோதிரங்களை நேர்மையுடன் ஒப்படைத்த சுமனுக்கு கடந்த 24-ம் தேதி மும்பை விமான நிலையத்தில் பாராட்டு விழா நடந்தது.

அப்போது அவருக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer