Monday, November 30, 2015

யாழ் பொது நூலகத்திற்கு தென்னிலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 10,000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

புத்தகங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதில், தென்னிலங்கை கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியிருந்தனர்.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு இலட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்படியாக புனரமைக்கப்பட்டு, பின்னர் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர், முதற் தடவையாக பெருமளவிலான புத்தகங்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து இந்த நூலகத்திற்கு இப்போதுதான் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும், சிறுகதை, நாவல், இலக்கியம், கலை, கலாச்சாரம், அறியியல், சமூகவியல், சுயசரிதை என்று பல்துறை சார்ந்த நூல்களும் இவற்றில் அடங்கியிருக்கின்றன.

யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட வன்செயலை மூடிமறைப்பதற்கோ அல்லது அந்தப் பாதிப்புக்ககான நிவாரணமாகவே இந்தப் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவில்லை என யாழ் பல்கலைக்கழக மொழியியல் பிரிவின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதம் விமல் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

“இந்த நூலகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அறிவுசார்ந்த நடவடிக்கைக்குத் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது கடந்துபோன வரலாற்றை நோக்கிய ஒரு செயற்பாடல்ல. எதிர்காலத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer