Saturday, July 25, 2015

தமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டு போவது தொடர் கதையாகிவருகிறது. ஓயாத அழுகை, பேயை காண்பித்து மூட நம்பிக்கையை தூண்டுவது போன்ற காட்சிகளோடு, ஓயாத இந்த சீரியல்கள், ஆபாசத்தின், அருவெறுப்பின் எல்லைகளையும் தொட்டுப் பயணிக்க தொடங்கியுள்ளது ஆபத்தான போக்கு. விஜய் டிவி சீரியல்களில் பெரும்பாலும், மாமியார்-மருமகள் மற்றும் குடும்ப சதிகள் முன்னிலைப்படுத்தப்படாமல், மிகுந்த இயல்போடு இருந்தன. இதுதான் விஜய் டிவி சீரியல்கள் மாறுபட்டிருக்கவும், வெற்றி பெறவும் காரணமாக அமைந்தன.

சரவணன் மீனாட்சி எபிசோட் ஆபாசம் தாண்டிய அருவெறுப்பாக இருந்ததுதான் அபத்தம். மீனாட்சி கதாப்பாத்திரம் மட்டுமின்றி அதன் அம்மா கதாப்பாத்திரமும் டேமேஜ் செய்யப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலையால், விருப்பமில்லாமலே, வேட்டையனும், மீனாட்சியும் திருமணம் செய்துவிட்டனர். இதனாலேயே, அவர்களுக்குள் ‘எதுவும்’ நடக்கவில்லை. நேற்றைய எபிசோடில், மீனாட்சி ஆடை மாற்றும் அறைக்குள் வேட்டையன் எதிர்பாராமல் போய்விடுகிறார். அவ்வளவுதான், அதை வைத்து, அண்ணாமலை ரஜினி மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டார் வேட்டையன்.

‘அந்த காட்சியை’ பார்த்ததால் வேட்டையன் கண்கள் கோணிக்கொள்கின்றனவாம். இதைப்பார்த்த மீனாட்சி, நீ பார்த்தியா.. என்று கேட்க, வேட்டையன் வெட்கத்தோடு இல்லை என்கிறார். ஆனால், கண் அப்படி மாறிப்போயிருப்பதை பார்த்து மீண்டும்.. மீண்டும்.. மீனாட்சி கேட்டுக்கொண்டேயிருக்க, ஆமா, பார்த்தேன். ஆனா முதுகுல இருந்த மச்சத்த மட்டும்தான் பார்த்தேன் என்று வெட்கப்பட்டுக் கொண்டே ஓடிவிடுகிறார் வேட்டையன்.

சரி அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால், வயல் வெளியில் உட்கார்ந்திருக்கும் வேட்டையனை, அவனது தோழி மைனா தேடி வருகிறாள். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க அவளிடமும் பார்த்த விஷயத்தை சொல்லி பரவசமடைகிறார் வேட்டையன். இளம் பெண் கதாப்பாத்திரமான மைனா, வேட்டையனிடம் “பார்த்தியா.. முழுசா பார்த்துட்டியா..” என்று திரும்ப திரும்ப கேட்டு பார்வையாளர்களை நெளிய வைத்தார்.

மைனாவிடம், வேட்டையன் சொன்னதுதான் அதில் டாப். ஆயிரங்கால் மண்டபத்துல உள்ள சிலையை மாதிரி இருந்தது என்று சொன்னாரே பார்க்கலாம். அது மட்டுமா, மீனாட்சி ஒரு ‘கன்ட்ரி உட்’ என்றதுடன் அதை டிரான்ஸ்லேசன் செய்து நாட்டு கட்டை என்று தெளிவுரையும் தந்தார். மைனா மீனாட்சியிடம் சென்று இதை அப்படியே சொல்லி அதை வைத்து கொஞ்ச நேரம் ஓட்டினார்கள். இன்றும், இதே எபிசோட் தொடரும் என்பதற்கு அறிகுறி தெரிகிறது.

இது ஆபாசம் என்றால், மீனாட்சி தாயை வைத்து ஒரு அருவெறுப்பும் அரங்கேறியது. மீனாட்சிக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் தாயாக வரும் கதாப்பாத்திரம் எந்த அளவுக்கு ஆபாசமாக சித்தரிக்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு சித்தரிக்கப்பட்டது. மீனாட்சியின் தந்தை, அவரின் மகன் வயதுள்ள வில்லன் கதாப்பாத்திரத்தை வீட்டுக்கு கூட்டி வந்து மீனாட்சி தாயிடம் காபி கொடுக்க சொல்கிறார். மீனாட்சியின் தாயும், தந்தையும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த இளைஞன் கதாப்பாத்திரம் தனது நண்பர்களிடம் சொல்கிறது, “இவள (மீனாட்சியின் தாயை) தூரத்துல இருந்து பார்த்ததால சரியா தெரியல (!). பக்கத்துல வச்சி பார்த்தா, ப்பா.. வாழ்ந்திருக்கான்யா (கணவன்)” என்று கொச்சையாக பேசி சிரிக்கிறார்.

ஒருபக்கம், மீனாட்சியை ஆபாசமாக காட்டிய சீரியல், அதேநாளில் மற்றொரு பக்கம் மீனாட்சி தாயை, அருவெறுப்பாக காண்பித்தது. இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. எனவே, குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இதை பார்க்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சீரியலில் இந்த ஆபாசமும், அருவெறுப்பும் தேவையா பாஸ்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer