Friday, July 31, 2015

பிரித்தானியாவில் பூக்களை அழகாக படம்பிடித்துக்கொண்டிருந்த புகைப்படக்காரரிடம் இருந்து கமெராவை மர்மநபர்கள் பறிக்க முயன்றதால் அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மேற்கு மிட்லாண்ட்ஸின் டூட்லே பகுதியில் அமைந்துள்ள பிரியரி பூங்காவில் உள்ள பூக்களை, 69 வயதான புகைப்படக்காரர் ஒருவர் படம்பிடித்துகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரிடம் இருந்த கமெராவை பறிக்க முயன்றுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் புகைப்படக்காரருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, இருப்பினும், மோட்டார் சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர்களை அவர் புகைப்படமெடுத்து அதை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கமெராவை பறிக்க முயன்ற அந்த மர்ம நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தான் என்று தெரிவித்த பொலிசார், அந்த நபர்கள் குறித்து கூடுதல் தகவல்களை பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இளவயதும் சிவப்பு நிற ஜாக்கட் அணிந்திருந்ததாகவும், அவரது பின்னால் இருந்து பயணம் செய்தவர் கருமை நிறத்திலான உடை அணிதிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டூட்லே பகுதி மக்கள் பயமின்றி பூங்காக்களுக்கு வருவதற்கு உதவும் வகையில், அந்த திருடர்களை உடனடியாக கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer