Friday, July 31, 2015

முன்னாள் ஜனாதிபதியும், அறிவியலாளருமான அப்துல் கலாம் மறைவை ஒட்டி இந்தியாவே சோகக் கடலில் மூழ்கியது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், குழந்தைகள் என பலரும் சமூக வலைதளம் துவங்கி, தெருக்களில் பேனர்கள் என வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

பலரும் தங்களது புரொஃபைல் கூட கலாமின் படமோ, அல்லது கருப்பு நிற படமோ என இப்போது வரை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யூத் சென்சேஷனல் நடிகர்களான விஜய், அஜித் அப்துல்கலாம் மறைவு குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என இரு பக்கமும் பிரச்னை எழுந்துள்ளது.

எனினும் விஜய்யின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கலாம் மறைந்த அன்று மட்டும் அப்துல்கலாம் சார் நீங்கள் மனிதநேயத்தின் மறுவரையறை. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் எந்தச் செய்தியும் இது குறித்து போடப்படவில்லை.

அதே சமயம் நேற்று கலாமின் நல்லடக்கம் நடந்த போது கூட ’புலி’ படத்தின் இசைவெளியீட்டுச் செய்தியை (Admin) என்ற ஒரு வார்த்தையுடன் வெளியிட சமூக வலைதளங்களில் பிரச்னை உருவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ விஜய் ட்விட்டர் பக்கத்தில் (Admin) என்ற வார்த்தையுடன் ட்வீட் போடப்பட  அவரது ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்போது அதை தவிர்க்கும் பொருட்டு அப்துல்கலாம் மறைவு குறித்து நேற்று இரவு இரு ட்வீட்கள் போடப்பட்டுள்ளன. ”தூய்மையான தேசத்தை உருவாக்கவும், அவரது கனவுகளை நினைவாக்கவும் இப்போது நாம் கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் -VJ- “ என  இரண்டு ட்வீட்கள் போடப்பட்டுள்ளன. பல நடிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தை பிஸி வேலை நிமித்தம் காரணமாக அட்மின் வைத்து கையாளுவது தெரிந்ததே எனினும்  (Admin) என்ற வார்த்தை தேவையா. இனிவரும் ட்வீட்டுகள் அவருடையதுதானா அல்லது அட்மினுடையதா என்ற குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தும்.

அதே போல் தனது பட நிகழ்ச்சிகள், பொதுவிழாக்கள் என கலந்து கொள்ளாமல் அஜித் தவிர்ப்பது சரி, ஆனால் நாடே ஒரு விஷயத்தை நினைத்து வருந்தும் வேளையில் ஒரு சின்ன இரங்கல் செய்தி கூட அஜித் தெரிவிக்கவில்லையே என்ற எண்ணத்தை பலருக்கு உருவாக்கியுள்ளது.

ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் இந்த நேரத்தில் இசை வெளியீட்டு செய்தி ஏன் என கேள்வி எழுப்பினால், உங்கள் தலைவர் சின்ன செய்தி கூட வெளியிடவில்லையே என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்விகள் எழுப்பி சண்டையிட்டு வருகிறார்கள், இதற்கு பதிலாக சில சமூக வலைதள வாசிகள் அஜித் ஏற்கனவே ஷாலினியுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

ஒன்று மட்டும் நிச்சயம் ரசிகர்களின் இந்த போக்கை அவ்விரு நடிகர்களே தீர்த்து வைக்க வேண்டும், அல்லது இது போன்ற நிகழ்ச்சியின் போது ஒரு வருத்தம் தெரிவித்த செய்தியையாவது சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனினும் இது போன்ற நிகழ்ச்சிகளில் ரஜினி, கமல், விஜய் , அஜித் போன்றோர் ஏன் வரவில்லை எனக் கேட்பது நியாமற்ற செயல், உண்மை நிலவரம் அவர்களுக்கும் தெரியும். ஒருவேளை அவர்கள் வந்தால் ரசிகர்கள் தன் விருப்ப நடிகரைப் பார்த்த சந்தோஷத்தில் கூச்சலிடவோ, அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ செய்துவிட்டால் கண்டிப்பாக அனைவருக்கு மன சங்கடம் என்பதாலேயே இது போன்ற நிகழ்வுகளை அவர்கள் தவிர்க்கின்றனர். மேலும் இதுகுறித்தும் சர்ச்சை உண்டாகிவிடும்.

 வளார்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் இரங்கல் செய்தியை எப்படி வேண்டுமானாலும் பகிரலாம். சமூக வலைதளங்கள் மூலமாகவோ, அல்லது பத்திரிக்கை அறிவிப்பாகவோ கூட கொடுத்தால் சர்ச்சைகள் குறையும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer