Monday, June 29, 2015

பணம் எடுக்க மக்கள் அடி பிடி..

கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரசம் காண முடியாமல் எதிர்வரும் யூலை 5ம் திகதி சர்வஜனவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பதும், விவகாரத்தை மக்கள் கையிலேயே கொடுத்திருப்பதும் தெரிந்ததே.

கிரேக்கத்தின் கடன் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்கலாமா விடலாமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டிய நிலை.

இப்;போது பிரான்ஸ் மறுபடியும் பேச்சுக்களை நடத்த வரும்படி கிரேக்கத்தை அழைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜன் கிளவுட் ஜங்கர் கிரேக்கம் 19 நாடுகளைக் கொண்ட யூரோ நாணய வலயத்தில் தானும் ஒன்றாகத் தொடரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூரோ நாணய நாடுகளிடையே ஈகோ பிரச்சனை தேவையில்லை, அனைத்து நாடுகளும் ஒன்றாகவே மதிக்கப்படும் என்றும் அழுத்தம் திருத்தமாக கருத்துரைத்துள்ளார்.

பணக்கார நாடுகளின் மரியாதைக் குறைவான அழுத்தங்களால் நொந்து போன கிரேக்க அதிபர் அலக்சிஸ் ரிசிப்ராஸ் நேற்று முன்தினம் கிரேக்கம் பெருமை மிக்க நாடென்று கோபமாக தெரிவித்திருந்தார், அதைத் தொடர்ந்தே ஜங்கர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்னொரு புறம் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் கிரேக்கம் தொடர்பாக தான் கொண்ட கடும் போக்கை மாற்ற இருப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் அதிரடியாக அந்தர் பல்டியடிக்க பின்னால் நிற்கும் அமெரிக்காவே காரணம் என்று கூறப்படுகிறது.

கிரேக்கம் இருக்கும் பிராந்தியம் இப்போது எரிந்து கொண்டிருக்கிறது, சிரியா, துருக்கி போன்ற நாடுகளின் சிக்கல் பெரும் பிரச்சனையாக இருக்கிறது, இதற்குள் கிரேக்கத்திலும் சிக்கல் வந்தால் பிராந்தியமே சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கிரேக்கம் வங்குரோத்தானால் ஆபிரிக்க அகதிகளைவிட கிரேக்க அகதிகளின் படையெடுப்பு கட்டு மீறிப்போய்விடும் என்பதை பயத்தினால் இதுவரை யாரும் பேசவில்லை.

ஆகவேதான் கடும் போக்கைக் கடைப்பிடிக்காது கிரேக்கப் பிரச்சனையை பேசித் தீர்க்கும்படி கேட்டுள்ளது.

மறுபுறம் இன்று திங்கள் அதிகாலையே கிரேக்க வங்கிகள் மூடப்பட்டுவிட்டன, வரும் 5ம் திகதி கிரேக்கத்தில் நடக்கவுள்ள வாக்கெடுப்பை அவதானித்த பின் 6ம் திகதியே வங்கிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வங்கிகளின் தானியங்கிகளில் ஒருவர் 60 யூரோவுக்கு மேல் எடுக்க இயலாது என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5500 பணமெடுக்கும் தானியங்கிகளில் மூன்றில் இரண்டில் இருந்த பணம் துடைத்தெடுக்கப்பட்டுவிட்டது.

இன்றே ஓய்வூதியம் எடுப்போர் பணமெடுக்க முற்றுகையிட்டுள்ளனர், கடந்த ஐந்து வருடங்களாக தாம் படும் பாடு போதும் போதும் என்று பலர் கூறியுள்ளனர்.

அலைகள் 29.06.2015 திங்கள் மாலை

0 comments :

Post a Comment

 
Toggle Footer