Tuesday, June 30, 2015

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒரு முதலமைச்சர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் அதிஷ்டானத்தில் இன்று (செவ்வாய்) முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடி அரசு தற்போது அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். லலித்மோடிக்கு உதவி செய்த அமைச்சர் சுஷ்மா மற்றும் முதல்வர் வசுந்தரா ராஜூ சிந்தியா இதே போன்று சுமிதிராணி மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் முண்டே ஆகியோர் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

அனைத்து  விஷயங்களுக்கும் வாய்திறந்து பேசும் மோடி இவர்களின் விஷயத்தில் இதுவரை வாய்திறக்காமல் மவுனியாக இருப்பதன் காரணம் என்ன. அத்வானி மறைமுகமாக ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறியபிறகும் இதுநாள் வரை அவர்களை பதவி நீக்கம் செய்யாதது ஏன். 4 அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தால் மோடி அரசு ஆட்டம் கண்டுவிடும். அதனால்தான் பிரதமர் மவுனியாக உள்ளார்.

ஊழல் குற்றாசாட்டுகளுக்கு உள்ளான 3 மத்திய அமைச்சர்கள் ஒரு முதலமைச்சர் பதவி விலகும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது. பாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும். எந்தவித செயல்பாடும் நடக்காது. எந்த சட்டமும் நிறைவேறாது. மக்கள் மத்தியில் நரேந்திரமோடியின் சாயம் வெளுத்து வருகிறது.

திகார் சிறை என்பது மிகவும் பாதுகாப்பானது. அதில் இருந்து சிறை கைதி தப்பித்துள்ளது குறித்து தில்லி துணை ஆளுனர் உரிய விசாரணை நடத்தினால் இதற்கு யார் காரணம் என்பது தெரியவரும். லலித்மோடி சோனியாவையும் ராகுல் காந்தியையும் எந்த காலத்திலும் சந்தித்தது கிடையாது. லண்டனில் ஒரு விடுதியில் உணவு அருந்தும் போது பிரியங்காவையும் ராபர்ட்வதேராவையும் லலித்மோடி சந்தித்து உள்ளார். இது சகசமான சந்திப்பு. ஆனால் சுஷ்மா லலித்மோடியை தனி அறையில் சந்தித்தது தான் குற்றம். 
மெட்ரோ ரயில் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும். குறைப்பார்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது என்பது எழுதப்படாத  சட்டமாகிவிட்டது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது. மேலும் ஓட்டிற்கு பணம் மதுபாட்டில்கள் ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ஓட்டிற்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

முதியோர் உதவி தொகை வழங்குவதில் குளறுபடிகள் உள்ளது. மத்திய அரசு 300 ருபாய் அளிக்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசு அளித்து முதியோர் உதவி தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மாநில அரசு நிதியை அளிக்காமல் உள்ளதால் முறையாக முதியோர் உதவி தொகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் நரேந்திரமோடி அரசு மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைத்து புறக்கணித்து வருகிறது.

குறிப்பாக எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதியை குறைத்து வழங்குவதால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதி நிதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3200 கோடி ருபாய் வழங்கப்பட்டது. ஆனால் மோடி அரசில் இது ஆயிரத்து 500 கோடி ருபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் சாராயகடையை அகற்றகோரி பெண்கள் சாராயகடையை சூறையாடிய சம்பவம் தொடராமல் இருக்க புதுச்சேரி மாநில அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து அந்த சாராய கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

இரா.பகத்சிங்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer