Monday, June 29, 2015

துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளருக்கு ஆதரவான பேரணியில் அதிபர் எர்டோகனுக்கு எதிரான கோஷங்கள் எழுந்ததால் இப்பேரணியில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் ரப்பர் துப்பாக்கிகளால் சுட்டும் பெப்பர் ஸ்பிரே இனைப் பிரயோகித்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் களைத்துள்ளனர்.

கடந்த 13 வருடங்களாக இதுவரை இஸ்தான்புல்லில் நடத்தப் பட்ட ஓரினச் சேர்க்கையாளருக்கு ஆதரவான அனைத்துப் பேரணிகளும் அமைதியாகவே நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் புனித மாதமான ரமடானின் போது இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டதால் தான் அது இஸ்தான்புல் நகர நிர்வாகத்தால் களைக்கப் பட்டதாக இதனை ஒழுங்கு செய்திருந்தவர்கள் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் போலிசார் வேண்டுமென்றே தான் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒடுக்கியதாகவும் குறித்த பேரணியின் போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் AFP ஊடகப் புகைப்படவியலாளர் ஒருவர் மீதும் அரசுக்கு ஆதரவான ஒரு குழு தாக்குதல் நடத்திய போது  அதனைத் தடுக்கப் போலிசார் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டப் பேரணியினர் இஸ்தான்புல்லின் பிரபல டக்சிம் சதுக்கத்தை நெருங்க விடாது போலிசார் பாதையினை மூடியிருந்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இதேவேளை அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான பாபி ஜிண்டால் தனது சமூக வலைத் தளத்திலும் பிரச்சாரத்தின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்களது திருமணத்தை அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம் அங்கீகரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு அதிபர் ஒபாமாவும் அவரது ஜனநாயகக் கட்சி சார்பாப் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிங்டனும் ஆதரவு தெரிவித்தமையையும் பாபி ஜிண்டால் விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer