Tuesday, June 30, 2015

இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் உள்ள மேடான் என்ற நகரில் இன்று வீடு மற்றும் ஹோட்டல் கட்டடங்களை உடைத்துக் கொண்டு இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. 12 குழு உறுப்பினர்கள் உட்பட 122 பேருடன் பயணித்த C-130 Hercules என்ற குறித்த இராணுவ விமானம் 50 வருடங்கள் பழமையானது என்றும் கூறப்படுகின்றது.

குறித்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஐக் கடந்துள்ளது என இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்துள்ளதுடன் இதில் 49 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும் அவற்றில் 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. குறித்த விமானம் ஜகார்த்தாவின் ஹலிம் பெர்டனகுசுமா விமான நிலையத்தில் இருந்து பெகன்பரு மற்றும் டுமாய் வழியாக  நாடுனா தீவுகளுக்குப் புறப்பட்ட போதே மெடானில் விபத்தில் சிக்கியுள்ளது. சில தரப்புக்களின் தகவல் படி விமானத்தில் 113 பேர் மாத்திரமே பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. இதுவரை விபத்துக்கான காரணம் உறுதியாகத் தெரியாத நிலையில் இந்த விபத்து, தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான இந்தோனேசியாவின் விமானப் பாதுகாப்புக் குறித்து புதிய ஐயங்களைத் தோற்றுவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விமானம் மெடானின் குடியிருப்புப் பகுதியில் முக்கிய போக்குவரத்துப் பாதைகளுக்கு இடையே விபத்தில் சிக்கியதால் தரையில் இருந்தவர்களிலும் கணிசமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது. பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப் பட்டதுடன் பல உடல்கள் அடையளம் தெரியாதவாறு தீயில் கருகியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது. 6 மாதங்களுக்கு முன்னர் தான் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் விபத்தில் சிக்கியதில் 162 பயணிகள் கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer