Monday, June 29, 2015

இந்தியாவில் மேகி நிறுவனத்தின் நூடில்ஸில் அதிக இரசாயனம் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டு அது நாடு முழுதும் தடை செய்யப் பட்டிருப்பது அண்மைய செய்தி. ஆனால் உலகின் பல பாகங்களில் இதே போன்ற சர்ச்சைக்குரிய அதே நேரம் பிரபலமான உணவு வகைகள் பல இருந்து வருகின்றன. இவற்றில் சில தடை செய்யப் பட்டும் சில இன்னமும் நடைமுறையில் உண்ணப் பட்டும் வருகின்றன. அது போன்ற 8 உணவு வகைகளின் விபரம் கீழே:

1. உணவு - கசு மர்சு (Casu Marzu)
  நாடு - இத்தாலி

உண்மையில் இது சற்றுக் காலம் சென்ற (அழுகிய) சீஸ் வகையாகும். இந்த உணவுக்குள்ளே பல ஆயிரக் கணக்கான உயிருள்ள புழுக்கள் இருக்கும் என்றும் இது உண்பவரின் கண்களைக் கூடச் சென்றடையக் கூடும் என எச்சரிக்கப் படுகின்றது. மேலும் இதற்குள் இறந்து போன புழுக்கள் இருந்தால் இந்த கசு மர்சு விஷமுள்ளதாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

2. உணவு - ஃபுகு மீன் அல்லது புஃபெர்ஃபிஷ்
   நாடு - ஜப்பான்

இந்த மீன் மிகச் சுவையானது என்ற போதும் நன்கு பயிற்றுவிக்கப் பட்ட சமையல்காரரால் இது ஆக்கப் பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்தே இதை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த மீனின் ஈரல் மற்றும் சில பாகங்களில் காணப்படும் டெட்ரோடொடொக்ஸின் என்ற பதார்த்தம் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதால் குறித்த பாகங்கள் கவனமாக நீக்கப் பட்ட பின் இது சமைக்கப் பட வேண்டும் என்பது மட்டுமல்லாது சமைத்த பின் சுவையும் பரிசோதிக்கப் பட்ட பின்னரே பரிமாறப் படுவதும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. உணவு - இகுஷுகுரி
   நாடு - ஜப்பான்

இந்த மீனானது இரவு உணவுக்காக உண்ணப் படும் வேளையில் அது மிகவும் புதிய மீன் என்பதை நிரூபிக்கப் பெரும்பாலும் அது உயிருடன் துடித்துக் கொண்டு இருக்கும் போதே உண்ணப் படுவதால் இது மிகவும் சர்ச்சைக்குரிய உணவாகக் கருதப் படுகின்றது.

4. உணவு - யின்யங் மீன்
   நாடு - தைவான்

இந்த மீனும் மிகவும் புதிதாகப் பரிமாறப்படுகின்றது என்பது நிரூபிக்கப் படுவதற்காக சில விநாடிகளே சூடு காட்டப் பட்டு அது உயிருடன் பரிமாறப்படுகின்றது. இதனால் தாய்வான், அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இந்த வகை உணவைத் தடை செய்துள்ளன.

5. உணவு - டுருங்கென் ஷ்ரிம்ப்
   நாடு - சீனா

இந்த ஷ்ரிம்ப் மீனானது மிக உறுதியான அல்கொஹோலில் அமிழ்த்தப் பட்டு உண்பதற்கு இலகுவாகப் பரிமாறப்படுகின்றது. ஆனால் சமைக்கப் படாத ஷெல் ஃபிஷ் ஆனது pargonimiasis என்ற மிகத் தீவிரமான சுகாதாரக் கேட்டுக்கு உடனே இட்டுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. உணவு - ஒர்ட்டோலன்
   நாடு - பிரான்ஸ்

பிரான்ஸில் இது தற்போது தடை செய்யப் பட்ட உணவாகும். ஏனைனில் மிகவும் அருகி வரும் இந்த சிறிய பறவை சட்ட விரோதமாக வேட்டையாடப் பட்டு துன்புறுத்தப் பட்டு (குருடாக்கப் பட்டு) பிராண்டி வகை அல்கோஹோலில் அமிழ்த்தப் பட்டு பின்னர் ரோஸ்ட் செய்யப் பட்டு உணவுக்காகப் பரிமாறப் பட்டு வந்த ஒன்றாகும்.

7. உணவு - பழம் உண்ணும் வௌவால் சூப்
   நாடு - குவாம், அமெரிக்கா

இவ்வகை வௌவால்கள் நன்கு சுத்தப் படுத்தப் படாது இந்த சூப் தயாரிக்கப் படுவதால் இது மனிதர்களிடையே நரம்பியல் தொடர்பான வியாதிகளை எற்படுத்தக் கூடும் என்பதுடன் rabies என்ற வெறி நோயையும் ஏற்படுத்தக் கூடியது ஆகும்.

8. உணவு - சன்னக்ஜி (உயிருள்ள ஆக்டோபஸ்)
   நாடு - தென்கொரியா

இந்த ஆக்டோபஸ் பிடிக்கப் பட்டு கழுவப்பட்டு பின்னர் அவை வெட்டப் பட்டு துடித்துக் கொண்டிருக்கும் போதே பரிமாறப் படுகின்றது. இவை முறையாக மென்று உண்ணப் படா விட்டால் நமது உணவுக் குழாயை அடைத்து மூச்சுத் திணறலையும் ஏன் உயிராபத்தையுமே ஏற்படுத்தும் ஆபத்து உடையவை ஆகும்.

நன்றி: தகவல் Times of India

0 comments :

Post a Comment

 
Toggle Footer