Monday, June 29, 2015

ஞாயிற்றுக்கிழமை தாய்வானின் தலைநகர் தைபேயிற்கு அண்மையில் உள்ள water park எனப்படும் கேளிக்கைப் பூங்காவில் கொண்டாட்டத்துக்காகப் பங்கேற்றிருந்த மக்கள் மீது தூவப் பட்ட மர்ம வண்ணப் பூச்சு வெடித்ததில் ஏற்பட்ட எரிகாயங்களுக்கு 519 பேர் உள்ளாகியுள்ளனர்.

இதில் 194 பேருக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதில் 8 பேருக்கு வாழ்நாள் முழுதும் பாதிக்கக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த விபரீத சம்பவம் குறித்த விசாரணையினை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களில் 6 வெளிநாட்டினரும், ஹாங்கொங், சீனா மற்றும் மக்காவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 பேரும் கூட அடங்குகின்றனர்.  மேலும் சனிக்கிழமை பின்னிரவு மர்மப் பொடி தூவப் பட்ட போது குறித்த பூங்காவுக்குள்ளே சுமார் 1000 பேர் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் எக்காரணத்தினால் இந்த வண்ணப் பூச்சு வெடித்தது என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் முறையான அறிவித்தல் வரும் வரை நாடு முழுதும் கேளிக்கைப் பூங்காக்களில் இந்த வண்ணப் பூச்சினைப் பாவிக்கத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாரும் பலியானதாக அறிவிக்கப் படவில்லை என்ற போதும் பலருக்கும் மிகத் தீவிரமான எரிகாயங்கள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதைவிட கடந்த சில வாரங்களாகத் தைபேயில் வெப்பநிலை 30 டிகிரிக்கும் அதிகமாகக் கொளுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer