Tuesday, June 30, 2015

பொதுவாக நாம் பயன்படுத்தி வரும் கால வரையறைகளான வருடம், நாள் மற்றும் மணித்தியாலம் என்பவை பூமி தன் அச்சில் சுழல்வதன் சார்பாகவும் அது சூரியனைச் சுற்றி வருவதன் சார்பாகவுமே கணிக்கப் பட்டு வருகின்றன.

பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் என்பதால் 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தக் காற்பங்கு ஓர் நாளாக்கப் பட்டு லீப் வருடத்தில் 366 நாட்களாக அதாவது பெப்ரவரி மாதம் ஒரு நாளைக் கூட்டி 29 நாட்களாக நாம் பயன்படுத்துவது அனைவரும் அறிந்த விடயமே.

இது போன்றே பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மிகச் சிறிய தொய்வும் அது ஒரு முறை தன் அச்சில் சுழல எடுக்கும் காலமான 24 மணித்தியாலத்தில் (84600.002 நொடிகள்) சிறு மாற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்த மாற்றத்தை நாம் அவசியம் பின்பற்றுவதும் முக்கியமானதாகும். நவீன தகவல் தொழிநுட்ப யுகத்தில் 1972 ஆம் ஆண்டு முதல் இம்மாற்றத்தை நாம் கடைப்பிடித்து வருகின்றோம். ஆனால் லீப் வருடத்தில் வரும் பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு நமது பங்குச் சந்தைகளும் கணணி மென்பொருட்களும் தமது கட்டளை செயற்பாடுகளை உரிய விதத்தில் மாற்றியமைக்கப் பழகி விட்ட போதும் லீப் செகண்டுக்கு இன்னமும் அனைத்து பங்குச் சந்தைகளும், கணணி மென்பொருட்களும் இசையப் பழகவில்லை. வழமையாக இந்த லீப் செகண்டை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 இல் சேர்ப்பது வழக்கமாகும்.

1972 முதல் இதுவரை 25 நாட்கள் லீப் செகண்ட் சேர்க்கப் பட்டுள்ளது. அதன் படி இன்றும் (ஜூன் 30 2015) இரவு 23:59:59 இற்குப் பிறகு 00:00:00 மணி தொடங்க முன் ஒரு செக்கன் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப் பட்டு தொடங்கப் பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே பூமியின் சுழற்சி சார்பான எமது அணுக்கடிகாரத்தின் 23:59:60 (ஒரு நொடி கூட்டப் பட்டு) என்ற நேரத்தைக் கடந்து அதனுடன் இணைந்து எமது சேவைகளை நாம் பயன்படுத்த முடியும். ஆனால் 1 நொடி நிறுத்தப் பட்டு தொடங்கும் பட்சத்தில் உலகில் பல கணணி மென்பொருட்களும், பங்குச் சந்தைகளும், விமான சேவை நிலையங்களும், தொழிநுட்ப நிறுவனங்களும் ஸ்தம்பித்துப் போய் விடலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. கடந்த முறை 2012 இல் லீப் செகண்ட் சேர்க்கப் பட்ட போது மோஷில்லா, ரெட்டிட், ஃபோர்ஸ்குவாரே, யெல்ப், லிங்கெட்ல்ன் மற்றும் ஸ்டும்புள் உப்பொன் போன்ற பிரபல மென்பொருள் சேவைகளும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஜாவாவில் எழுதப் பட்ட அனைத்து புரோகிராம்களும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. அவுஸ்திரேலியாவில் மென்பொருள் கோளாறால் 400 விமானங்கள் தரையிறக்கப் பட்டிருந்தன.

இவ்வருடம் லீப் செகண்டை எதிர்கொள்ள கூகுள் நிறுவனமும் அமெரிக்க பங்குச் சந்தைகளும் சில உத்திகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருப்பதால் தமது வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சினை ஏற்படாது என அறிவித்துள்ளன. இதேவேளை 2015 நவம்பரில் உலக ரோடியோ தகவல் மாநாட்டில் லீப் செகண்டை எதிர்கொள்ளும் விதம் குறித்து விவாதிக்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer