Monday, June 29, 2015

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது.

இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் தரிந்து கவுஷால் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், 9 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் தொடங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்களுக்கு ஆல்–அவுட்டானது. சில்வா 80 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 177 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது. முன்கள வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், பின் வரிசையில் உள்ளவர்கள் நிலைக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி 329 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டானது. பாகிஸ்தானின் அசார் அலி சதம் (117) அடித்தார். அஹ்மத் ஷேசாத் (69) அரைசதம் விளாசினார். பந்துவீச்சில் தமிங்க பிரசாத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் இலங்கை அணிக்கு 153 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கை அணி எளிய இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டமான இன்று தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கருணாரத்ன, விதானகே களமிறங்கினர். இருவரும் நல்ல தொடக்க கொடுத்தனர். விதானகே அதிரயாக விளையாடி 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சங்கக்காரா (0) யாசிர் ஷா பந்தில் டக்- அவுட் ஆக நடையை கட்டினார். அதே சமயம் கருணாரத்ன (50) அரைசதம் எடுத்தார்.

பின்னர் அணித்தலைவர் மேத்யூஸ் (43), திரிமன்னே (20) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இலங்கை அணி 3 விக்கெட் இழந்த நிலையில் 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு இலங்கை பதிலடி கொடுத்துள்ளது. மேலும், டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer