Friday, May 29, 2015

'தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இனி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் பாதுகாப்பு கவசத்தை கையில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு' என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கிண்டலடித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சிக்கான வளர்ச்சி நிதி வசூல் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி வந்திருந்த சரத்குமார், திருச்சி சங்கம் ஹோட்டலில் கட்சி சார்பில் நடந்த நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் புரட்சி தலைவி அம்மா தலைமையிலான ஆட்சி நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் மிகச் சிறந்த ஆட்சியை, மிகச் சிறந்த திட்டங்களை முதல்வர் வழங்கி கொண்டு இருக்கிறார். அவர் தடைகளை உடைத்து மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மக்கள் நலனில் அக்கறை எடுத்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வார். அவர் போட்டியிடும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன்.

பிரதமர் மோடியின், வெளிநாட்டு பயணம் தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் தான் கொண்டுவந்துள்ள 'மேக் இன் இந்தியா' திட்டத்தையும் பிரபலபடுத்துவதற்காகவும், இந்திய பொருட்களின் தரம் பற்றி வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், வெளிநாடுகளுடனான நட்புறவு வளரும் வகையிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவே நினைக்கிறேன். கடந்த ஓராண்டில் மோடி ஆட்சி சிறப்பாக இல்லை என கூறுகிறார்கள். அவர் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்" என்றார்.

இதைத்  தொடர்ந்து செய்தியாளர்கள், அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சரத்குமார், "பா.ஜ.க– அ.தி.மு.க. இடையே மறைமுக உறவு இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு அம்மாதான் தமிழகத்திற்கு நல்லாட்சி தரவேண்டும் என்கிறார். அடுத்தநாள் திமுக தலைவரை சந்திக்கிறார். பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பேசுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து.

2016 தமிழக சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கும். அந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியே அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்றார்.

தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம் வகுக்கிறாரே என்ற கேள்விக்கு, "சின்ன சின்ன கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க.தான் அபார வெற்றியை பெரும். இத்தனை வருடங்கள் அரசியல் கட்சி நடத்தும் தி.மு.க டெல்லியில் பிரதமரை சந்திக்க விஜயகாந்த் தலைமையில்தான் செல்லும் நிலையில் இருக்கிறது. விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார். அன்புமணி ராமதாஸ் நானே முதல்வர் என்கிறார். நான் முதல்வராவது உறுதி என்கிறார்  ஸ்டாலின். பாஜக அடுத்து தமிழகத்தில் ஆட்சி பிடிப்போம் என்கிறது. இவர்கள் எல்லாம் கூட்டுசேர்ந்து ஆட்சியை பிடிக்கட்டும். முதலில் தேர்தல் வரட்டு பார்ப்போம்"  என்று பதிலளித்தார்.

இந்தம்மா ஆட்சியில இருந்ததால மழைக்கூட வராதுன்ணு சொன்ன ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரே என்கிற கேள்விக்கு  பதிலளித்த சரத்குமார், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கு கருத்து மாறுபாடு வரும். அப்போது அம்மாவின் செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்து சொன்ன ரஜினிகாந்தின் எண்ணத்தில் மாற்றம் வந்திருக்கக்கூடும். அதனாலே அவர் பதவியேற்பில் கலந்து கொண்டுள்ளார். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ரஜினி ஆதரிப்பது என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய சரத், நடிகர் சங்க தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிடுவேன் என்றார்.

விஜயகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கோபப்படுகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'இனி விஜயகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் பாதுகாப்பு கவசத்தை கையில் எடுத்ததுக் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு" என்றார்.

-சி.ஆனந்தகுமார்
vikatan

0 comments :

Post a Comment

 
Toggle Footer