Sunday, May 31, 2015

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு வந்திருந்த போது கடந்த 2ம் திகதி தாஜ் சமுத்திரா விடுதியில் அவரைச் சந்தித்த இலங்கை அரசாங்கக் குழுவில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இடம்பெற்றிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு தலைமை தாங்கியவர் இவர் தான் என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது சரத் பொன்சேகாவிடம் நீங்கள் இப்போது போரில் வெற்றி பெற்று விட்டீர்கள், இது நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் என்று ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

ஜோன் கெரி அவ்வாறு கூறியதன் வெளிப்படையான அர்த்தம் சர்வதேச நியமங்களுக்கேற்ப போருக்குப் பிந்திய நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

உள்நாட்டு போர்க்குற்ஹற விசாரணைக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக கூறி வருகின்ற நிலையில் தான் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்காவின் இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜோன் கெரி.

ஆனால் அண்மையில் பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாதகமான கருத்துக்களை வெளியிட்டிருப்பினும் சில முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணையைத் தாம் வரவேற்பதாகவும் இதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதாவது இப்போது சரத் பொன்சேகா போர்க்குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகியிருக்கிறது.

அதேவேளை இறுதிக்கட்டப் போரில் திட்டமிட்ட போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், ஆனால் சில் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனாலும் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை அவர் ஏற்கத் தயாராக இல்லை.

இதனை அவர் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்.

அடுமட்டுமன்றி அண்மையில் தி கார்டியனுக்கு அளித்திருந்த பேட்டியில் தாம் இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் பாலியல் வல்லுறவுகளோ சித்திரவதைகளோ இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக அவர் தான் இராணுவத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருப்பதாகவும் தனது தலைமைத்துவத்தில் எந்த மனித உரிமை மீறல்களும் நிகழவில்லை என்பதையும் எடுத்துக்கூற முற்பட்டிருக்கிறார்.

அதேவேளை சில குற்றங்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர் திட்டமிட்ட போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் சரத் பொன்சேகா வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார்.

போர் முடிவுக்கு வந்த 2009 மே 18ம் திகதி காலையில் வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இவர்கள் சரணடைந்த பின்னர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சரத் பொன்சேகா முன்னர், சண்டே லீடருக்கு வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியது மட்டுமன்றி அவரைச் சிறைச்சாலை வரை துரத்தியும் சென்றதை மறக்க முடியாது.

இப்போது சரத் பொன்சேகா வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து கருத்து வெளியிடத் தயாராக இல்லை.

அதற்கு அவர், அண்மைய தொலைக்காட்சி பேட்டியில் வசதியான ஒரு காரணத்தை முன்வைத்திருந்தார்.

தாம் இராணுவத்தின் இயந்திரக் காலாற்படைப் பிரிவுக்கு கவசவாகனங்களை கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்குச் சென்றிருந்த போதே அந்தச் சம்பவம் நடந்தது போன்று சூசகமாகப் பதிலளித்திருக்கிறார்.

போரின் இறுதிக்கடடத்தில் 2009 மே 11ம் திகதி சீனா சென்றிருந்த அவர், மே 17ம் திகதி இரவு 9 மணிக்கே நாடு திரும்பியிருந்தார்.

ஆனால் வெள்ளைக்கொடிச் சம்பவம் நிகழ்ந்தது மே 18ம் திகதி காலையில் தான்.

சரத் பொன்சேகாவின் இந்தப் பேட்டி வெளியான பின்னர் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹாரிசன் இதனை தனது ருவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சரத் பொன்சேகா நழுவ முனைந்தாலும் இராணுவத் தளபதியாக இருந்த அவர் அதற்குப் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் சரத் பொன்சேகா தான் சீனாவில் இருந்த போதும் நாளொன்றுக்கு மூன்று முறை கட்டளைப் பீடத்துடன் தொடர்பு கொண்டு களநிலைவரங்களை வழிநடத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது போர் முழுவதுமாக தனது நெறிப்படுத்தலில் தான் நடந்தது என்று அவர் ஒட்டுமொத்த வெற்றிக்கும் உரிமை கோரியிருக்கிறார்.

அதேவேளை அந்தக் காலப்பகுதியில் நடந்த வெள்ளைக்கொடிச் சம்பவத்துக்குப் பதிலளிக்காமல் அவர் நழுவ முயல்வதை நியாயமான விசாரணை என்று எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாது.

அதுபோலவே போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் காணாமற்போன 110 விடுதலைப் புலிகளின் தளபதிகள், பிரமுகர்கள் பற்றிய விபரங்களை அண்மையில் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் தான் யஸ்மின் சூகா.

அவர் வெளியிட்ட பட்டியலில் கொல்லப்பட்டு சடலங்களாக படங்களில் அல்லது வீடியோக்களில் காணப்பட்ட நடேசன், புலித்தேவன், பாலச்சந்திரன், கேணல் ரமேஸ், இசைப்பிரியா, திலக் உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கியுள்ளன.

யஸ்மின் சூகா வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் சரணடைந்ததற்கு நேரடியான சாட்சிகள் பலர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் குடும்பத்தினரால் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில் திட்டமிட்ட போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்று சரத் பொன்சேகாவினால் ஒருபோதும் வாதிட முடியாது.

சரணடைந்த பின்னர் காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட சம்பவங்களை எதேச்சையானவையாக எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்கு சரத் பொன்சேகாவே பதில்கூற வேண்டியிருக்கும்.

போர் ஒன்றில் சரணடைந்தவர்களைப் படுகொலை செயதல் ஒரு மோசமான போர்க்குற்றம் என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் சரத் பொன்சேகா.

ஆனால் இப்போது அவர் போரின்போது திட்டமிட்ட போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்று கூறுகிறார்.

இதனால் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதை அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டதை அவர் திட்டமிடப்படாத குற்றங்களாக அடையாளப்படுத்த முனைகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

சில சந்தர்ப்பங்களில் தனக்குத் தெரியாமல் போர்க்களத்தில் எதுவும் நடக்கவில்லை என்று பேட்டிகளில் குறிப்பிட்ட சரத் பொன்சேகா வேறு சில சந்தர்ப்பங்களில் தனக்குத் தெரியாமல் சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறவும் தயங்கவில்லை.

சரத் பொன்சேகா உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை வரவேற்றிருந்தாலும் அவர் எதிர்பார்ப்பது போன்று நியாயமான ஒரு விசாரணை அவருக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதைவிட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்திருந்தார்.

படையினர் இறுதி நான்கரை மாதங்களும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் அதனால் படையினர் அதிகளவில் பலியாக நேரிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்குத் தயார் என்று அவர் கூறினாலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்கவோ அல்லது பொய்யாக காண்பிக்கவோ அவர் தயாராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை போர்க்குற்ற விசாரணைகள் நீதியாக, நியாயமாக, நம்பகமாக நடக்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியாகவே இருக்கும் என்றே தெரிகிறது.

இத்தகைய நிலையில் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்புக்கூறியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஹரிகரன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer