Saturday, May 30, 2015

தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கி வருகின்றது என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓக்லான்ட் ஆய்வு நிறுவகம் (Oakland Institute) தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஓக்லான்ட் ஆய்வு நிறுவகம் கடந்த பல மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்குப் பின்னர் தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களை கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதா?, என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்களப் படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது.

2. இராணுவம் பாரிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆடம்பர உல்லாச விடுதிகளை நடத்துகின்றது. தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை, ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவத்தின் இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கான வேறு வழிகளற்ற சாட்சியங்களாவுள்ளனர்.

3. தமிழர் தாயகப்பகுதிகளில் இராணு வெற்றிகளைக் குறிக்கும் நினைவுத்தூபிகளை அமைப்பதன் மூலமாகவும், பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலமாகவும் இலங்கை அரசு தமிழ் கலாசாரம் மற்றும் வரலாற்றை திட்டமிட்ட முறையில் ஒடுக்க, அழிக்க முயல்கின்றது. இவை தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களின் ஆதிக்கத்தை பறைசாற்றுகின்றன. இப்பகுதியில் சிறியளவிலான சிங்களவர்களே வாழ்வது குறிப்பிடத்தக்கது.

4. அரசு உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ள போதிலும் யுத்தத்தின்போது காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையே காணப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாடுகள் அறிக்கை 70 ஆயிரம் பேர் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை வேறு அறிக்கைகள் இதனைவிட இரண்டு மடங்கு அதிகமானவர்கள் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer