Saturday, May 30, 2015

பாரிஸில் உள்ள ஆற்றுப்பாலத்தில் பூட்டப்பட்டுள்ள காதல் பூட்டுகளை அகற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள செயின் ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் காதலர்கள், தங்கள் காதல் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தில் பூட்டுகளை மாட்டிவிடுவார்கள்.

அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்து பிரான்ஸிற்கு சுற்றுலா வரும் பயணிகளும் காதல் பூட்டுகளை மாட்டிவிடுவார்கள்.

இந்த பூட்டுகளின் சுமை தாங்க முடியாமல், சமீபத்தில் பாலத்தின் ஒருபகுதி இடிந்துவிழுந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், லட்சக்கணக்கான பூட்டுகள் பாலத்தின் தடுப்புச்சுவரை ஆக்கிரமித்துள்ள நிலையில் அவற்றினை அகற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த பூட்டுகளால் பாரிஸின் பாரம்பரியம் சீர்குலைந்து வருவதாகவும், இந்த பூட்டுகள் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக உள்ளதால், அங்கு தொங்கவிடப்பட்டுள்ள ஒரு மில்லியன் பூட்டுகளை அகற்ற அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், இனிமேல் அங்கு யாரும் பூட்டுகளை மாட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

பாலத்தின் தடுப்புச்சுவற்றில் உள்ள இரும்பு கிரில்லுக்கு பதிலாக, கண்ணாடிகளால் வடிவமைக்கப்ட்ட பேனல்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer