Saturday, May 30, 2015

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸிற்கு அருகில் உள்ள தற்காலிக முகாம்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அங்கு தங்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை வெளியேறுமாரு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வடக்கு பாரீஸிற்கு அருகில் உள்ள La Chappelle என்ற பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் பாதைக்கு அடியில் சுமார் 400 வெளிநாட்டினர்கள் தற்காலிகமாக முகாம்கள் அமைத்து தங்கி வருகின்றனர்.

எரித்தியா, சூடான், எத்தியோப்பியா நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இவர்கள் தங்களது குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தங்கி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால், மோசமான தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அரசிற்கு தகவல் அனுப்பியது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை முகாம்களுக்கு வந்த பிரான்ஸ் பொலிசார், அந்த இடத்தை வெளியேறுமாறு புலம்பெயர்ந்தவர்களுக்கு உத்தரவிட்டனர்.

இது குறித்து பாரீஸ் துணை மேயரான Dominique Versini கூறுகையில், இந்த பகுதி முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், குழந்தைகளுடன் அவர்கள் தொடர்ந்து இங்கு வசித்து வருவது ஆபத்தாக முடிந்துவிடும் என்றார்.

சூடன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள Amanuel(21) என்பவர் கூறுகையில், பொதுவாக நாங்கள் பிரான்ஸ் நாட்டில் குடியேற விரும்பவில்லை. இங்கு இருந்து பிரித்தானியா செல்வதற்கு ரயில் போக்குவரத்து வசதி இருப்பதால் அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

மூன்று முறை இவ்வாறு ரயில் மூலமாக பிரான்ஸை விட்டு வெளியேற முயற்சித்தபோது பொலிசார் தன்னை கண்டுபிடித்து தடுத்து விட்டனர்.

இனிமேல் ரயில் கழிப்பறைகளில் தான் ஒளிந்துக்கொண்டு செல்ல வேண்டும். தற்போது இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று உத்தரவிட்டுள்ள பாரீஸ் பொலிசார், எங்கு செல்ல வேண்டும்? வேற ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளார்களா என்ற எந்த தகவலையும் அளிக்காததால் அனைவரும் குழப்பத்தில் உள்ளதாக Amanuel தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer