Saturday, May 30, 2015

சென்னை வியாசர்பாடியில் பெண் குழந்தையுடன் ராஜஸ்தானை சேர்ந்த பெண் மாயமானார். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 30). இவர், அதே பகுதியை சேர்ந்த ஹீனா (25) என்ற பெண்ணை காதலித்து 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு அஞ்சலி (வயது 1½) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற ஹீனா கடந்த வாரம் வீடு திரும்பினார். கடந்த 25-ந்தேதி மகள் அஞ்சலியுடன், ஹீனா கடைக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜூன், ஹீனாவையும், மகளையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஹீனாவையும், அவருடைய குழந்தையையும் தேடி வருகின்றனர்.

அவர்களை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம்பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer