Sunday, May 31, 2015

நேற்று சனிக்கிழமை இரவு பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானுக்கு அருகே 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியிருந்தது.

இதனால் டோக்கியோ உட்பட பல பகுதிகளில் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்குக் கட்டடங்கள் குலுங்கியதுடன் 12 பேருக்கு இலேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து வெகு விரைவில் பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் பூகம்ப அபாய பிரதேசத்தில் அல்லது அதன் அருகே மையம் கொண்டு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு பாரிய பூகம்பம் தாக்கலாம் எனப் புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் ஜப்பான் அரசும் மக்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலைக்குத் தம்மைத் தயார் படுத்தியுள்ளனர். இதற்கு வழி வகுக்கும் நிலையில் இன்று ஞாயிறு காலை டோக்கியோவுக்குத் தெற்கே இஷு தீவுகளுக்கு அண்மையில் 6.2 ரிக்டரில் மற்றுமொரு தொடர் அதிர்வு பதிவாகியுள்ளது. ஆனால் இதன்போதும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை. ஜப்பானைக் கடைசியாக 2011 மார்ச்சில் தாக்கிய பாரிய பூகம்பம் அந்நாட்டின் வடகிழக்கு கடற் கரையோரமாக சுனாமி அலைகளை உற்பத்தி செய்து பேரழிவை ஏற்படுத்தியதில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். மேலும் சுனாமி அலைகள் ஃபுக்குஷிமாவிலுள்ள அணு உலையின் 3 ரியாக்டர்களை சேதப் படுத்தி கதிர்வீச்சு அபாயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் உக்ரைனின் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு வரலாற்றில் பதிவான மோசமான அணுக்கதிர் வீச்சு விபத்தாக இது மாறியதுடன் 10 000 கணக்கான மக்களை இடம் பெயரவும் வைத்தது. மேலும் குறித்த அணு உலைப் பகுதி இன்னும் பல தசாப்தங்களுக்கும் மனிதர் வாழ முடியாத பகுதியாக மாறியுள்ளது.

ரிங் ஆஃப் ஃபைர் பிரதேசத்தில் உலகின் முக்கிய 4 நிலக்கீழ் தகடுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள ஜப்பானில் ஒரு வருடத்தில் உலகம் முழுதும் ஏற்படும் பூகம்பங்களில் 20% வீதமானவை அங்கு தான் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜப்பானின் பல முக்கிய நகரங்களது நகரக் கட்டுமானம் மற்றும் கட்டடங்களின் அமைப்பானது மோசமான நில அதிர்வுகளையும் தாக்குப் பிடிக்கக் கூடிய விதத்திலேயே அமைக்கப் பட்டுள்ளதால் அங்கு பொருள் சேதங்களும், உயிர்  சேதங்களும் பெருமளவு தவிர்க்கப் படுகின்றன.

இதேவேளை அண்மையில் ஜப்பானின் ஷிண்டாகே மலைத் தொடரிலுள்ள ஓர் எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பையும் வானில் 9000 மீட்டர் உயரத்துக்கு கரும்புகை மற்றும் சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் அப்பகுதியில் இருந்து பல ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer