Saturday, May 30, 2015

ஹாசன் அருகே வாய்பேச முடியாத ஒரு காதல் ஜோடி தங்களது மவுன மொழியில் பேசி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காதல் என்பது ஜாதி, மொழி, மதம், இனம் ஆகியவற்றை கடந்து வரும் ஒரு உன்னதமான உணர்வு. காதல் மொழி பேச வார்த்தைகள் தேவையில்லை. கன்னியின் கடைக்கண் பார்வையும், புன்சிரிப்புமே போதும் என்று பலர் கூறுவர். உன் மவுனமே என் சம்மதம் என்றும் காதல் வசப்பட்டிருப்பவர்கள் பேசி நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் மவுனத்தையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்ட ஒரு காதல் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகாவில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் வாய்பேச முடியாது. காதும் கேட்காது. ஆனால் இருவருமே தங்கள் மவுனத்தை அஸ்திவாரமாக்கி காதலித்து தங்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா அருகே உள்ள கொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ராதாமணி. இவர்களது மகள் காவ்யா(வயது 24). பிறந்ததில் இருந்தே இவரால் வாய்பேச முடியாது. காதும் கேட்காது. ஆனால் படிப்பில் கெட்டிக்காரியான காவ்யா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார்.

இதேபோல் பெங்களூரு ஜெயசாரதம்மா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கங்கம்மா. இவர்களது மகன் மணிகண்டன்(24). இவராலும் வாய்பேச முடியாது. காதும் கேட்காது. இவரும் அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். அப்போது அங்கே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் தங்கள் மவுன மொழியில் பேசி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் நண்பர்களாக பழகி வந்தனர். அது சிறிது காலத்தில் காதலாக மாறியது. இருவரும் ஜாதி, மதத்தைக் கடந்து உயிருக்கு உயிராக காதலித்தனர். பின்னர் தங்களது காதல் குறித்து இருவரும் தங்களது பெற்றோரிடம் கூறினர். அவர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து இருவரது பெற்றோர்களும் பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் காதல் ஜோடி மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறந்தது.

இந்த காதல்ஜோடியின் திருமணம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினரும், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தங்களது காதல் இனிமையாக திருமணத்தில் முடிந்ததுபோன்று, வாழ்க்கையும் இனிமேல் இனிமையாக இருக்கும் என்று காதல் ஜோடியினர் தங்களது மொழியில் அனைவரிடமும் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer