Saturday, May 30, 2015

கோடம்பாக்கதுக்கே பேய் பிடிக்கிற அளவுக்கு வரிசையாக வரிந்துகட்டி வருகிறன பேய் படங்கள். பேய் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்தப் படங்களை ரசித்து பார்க்கும் படி அமைந்துவிடுவதே இந்த வகை படங்களின் ப்ளஸ்! அந்த பேய் மோகத்தில் சூர்யாவும் சிக்கிவிட்டார். ஓவரா யோசிக்காம சிம்பிளா சூப்பரா ஒரு படம் நடிக்க சூர்யா நினைத்திருக்க கூடும் என்றே தோன்றுகிறது. அவர் நினைத்தது போலவே அமைந்திருக்கிறது ‘மாசு என்கிற மாசிலாமணி’.

சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவராக வளர்ந்த சூர்யா, பிரேம்ஜி இருவரும் திருடுவதும் கொள்ளையடிப்பதும் தான் பிழைப்பு, பொழுதுபோக்கு. சூர்யா வழக்கம்போல நயன்தாராவை சந்திக்கும் முதல் பார்வையில் காதலில் விழுகிறார். காதல் காட்சிகளில் சூர்யாவைப் பற்றி சொல்லவேண்டுமா? சில பல சேஷ்டைகள் செய்து நர்ஸாக பணிபுரியும் நயனை மடக்கிவிடுகிறார். அதேசமயம் நயன்தாராவின் பதவி உயர்வுக்காக 3.5 லட்சம் பணம் தேவைப்படுவது தெரியவர கடைசியாக பெரிய இடத்தில் கையை வைக்கின்றனர்.

வில்லன்களிடமிருந்து தப்பித்து வரும் வழியில் சூர்யாவும், பிரேம்ஜியும் விபத்துக்குள்ளாகிறார்கள். இந்த விபத்தில் இறந்துபோனவர்களின் ஆன்மாக்களைக் காணக்கூடிய, அவர்களுடன் பேசக்கூடிய சக்தி சூர்யாவுக்கு கிடைக்கிறது. சூர்யாவிடம் தங்களது கடைசி ஆசைகளை நிறைவேற்றித்தருமாறு கேட்கின்றன பேய்கள். ’என் தேவைகளை நீங்க நிறைவேத்துனா, உங்க ஆசைகளை நான் செய்கிறேன்’ என பேய்களுடன் டீலிங் போட்டுக்கொள்ளும் சூர்யா வீடு வீடாக அட்டகாசம் செய்ய பேய்களை ஏவிவிடுறார். அந்த பேய்களை விரட்ட சூர்யா அழைக்கப்பட்டு அவர் கேட்கும் பணமும் கொடுக்கப்படுகிறது.

இப்படி ஒரு வீட்டுக்குச் செல்லும்போது சூர்யா தன்னைப் போலவே ஒரு பேயை பார்க்கிறார். அந்த பேய் சூர்யா இந்த ஐடியா வேஸ்ட், பேய்களை வெச்சு கேவலமா திருட்றியே. பெரிய பெரிய லாக்கர் நம்பர் கண்டுபுடிச்சு பெரிய அமௌண்டா திருடலாமே என ஐடியா கொடுப்பதோடு மத்திய அமைச்சரின் கருப்பு பணம் இருக்கும் இடத்தையும் காட்டுகிறது.

சூர்யாவுக்கு பணத்தாசைக் காட்டி அவரை இரு கொலைகள் செய்ய வைப்பதுடன் மிகப்பெரிய சிக்கலிலும் மாட்டவைக்கும் பேய் சூர்யா யார்? இந்த பிரச்சனைகளிலிருந்து சூர்யா எப்படி தப்பிக்கிறார்? சூர்யா மற்ற பேய்களின் ஆசைகளை நிறைவேற்றினாரா? என்பதெல்லாம் விறுவிறுப்புடன் இரண்டாம் பாதியில் களைகட்டும் பேய் விருந்து.

சூர்யாவுக்காக மாற்றப்பட்ட கதை என்பதாலோ என்னவோ மொத்தமாக ஸ்கோர் செய்கிறார் சூர்யா. சிரிப்பு, நக்கல், அழுகை, காதல் என சூர்யாவுக்கு ஏற்ற படமாக மாசு உருவாக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். வெங்கட் பிரபுவிடம் நயன்தாராவின் ரசிகர்களின் கொந்தளிக்கப் போவது உறுதி. இரு நடிகைகளில் அதிக நேரம் திரையில் தோன்றுவது யார் என்று போட்டி வைத்தால் ப்ளாஷ்பேக்கில் வரும் ப்ரணிதா ஜெயிக்க வாய்ப்பு அதிகம்.

பிரேம்ஜியை அடக்கி வைக்க வெங்கட்பிரபு எவ்வளவு கஷ்டப்பட்டாரோ தெரியவில்லை. லொடலொடவென பேசாமல் அமைதியாக இருப்பது மனதுக்கு நிம்மதி. கருணாஸ், ஸ்ரீமன் சேர்ந்து செய்த காமெடிகளையெல்லாம் தூள் தூளாக்கி விடுகிறார் இரண்டாம் பாதியில் வரும்’நான் கடவுள்’ ராஜேந்திரன். இவர் செய்யும் அலப்பரைகளுக்கு அளவே இல்லை. கடைசி சில காட்சிகளில் வந்தாலும் தனது குதர்க்கமான வசனங்களால் மனதில் நின்றுவிடுகிறார் பார்த்திபன். சமுத்திரக்கனி தன் நடிப்பில் மாஸ் காட்டியிருக்கிறார். வேட்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ‘நான் தாண்டா ஆர்.கே’ என்று சொல்லும் காட்சியில் மிரட்டிவிட்டார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலும் சிறப்பாக படத்திற்கு பொருந்தியிருக்கின்றன. பின்னணி இசையில் வழக்கம்போல கலக்கியிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. கிராஃபிக்ஸ் வேலைகள் தான் படத்தின் அஸ்திவாரமே. அதில் சொதப்பல் ஏற்பட்டுவிடக்கூடாதென படக்குழு கவனமாக வேலை செய்திருப்பது நேர்த்தியான காட்சிகளில் தெரிகிறது.

சூர்யா பேய்களை தொட்டால் அவர்களது ப்ளாஷ்பேக் தெரிந்துவிடும் என்ற லாஜிக்கை வைத்திருக்கும் வெங்கட்பிரபு இரண்டு சூர்யாக்கள் சந்தித்துக்கொள்ளும் முதல் காட்சியில் இருவரும் கைகளை பிடித்துக்கொள்ளும் காட்சியை தவிர்த்திருக்கலாம். சப்பாத்தி கட்டையை தொட்டு உருட்டும் பேய்கள் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லாமல் சூர்யாவை தேடி அலைவதெல்லாம் எப்படி சார். லாஜிக் கழுதை கணக்கா உதைக்குதே!

பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதத்திற்குள் செல்லாமல், லாஜிக் பார்க்காமல் படம் எப்படி? என்று பார்த்தால் நல்ல எண்டர்டெயின்மெண்ட் படம் மாசு என்கிற மாசிலாமணி. எந்த வரையறைக்கும் உட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது மாசு என்கிற மாசிலாமணி.

மாசு என்கிற மாசிலாமணி - சூர்யா அடிக்கும் சிக்ஸர்!

வீடியோ இணைப்பு - விமர்சனம்

0 comments :

Post a Comment

 
Toggle Footer