Sunday, May 31, 2015

இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஜப்பானின் பொனின் தீவுகள் பகுதியினைத் தாக்கியுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் வலிமையான அதிர்வுகள் கடற்கரையோரமாக 194 Km நீளத்துக்கும் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவினையும் தாக்கியதுடன் மட்டுமல்லாது வட இந்தியாவில் டெல்லி உட்பட சில பிரதேசங்களிலும் மிதமான அதிர்வுகள் உணரப் பட்டுள்ளன.

டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கிய போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப் படவில்லை. மேலும் பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. குறித்த நிலநடுக்கமானது டோக்கியோவுக்குத் தெற்கே ஒகசவாரா தீவுகளை மையமாகக் கொண்டு 590 Km ஆழத்திலேயே ஏற்பட்டுள்ளது. இந்த வலிமையான பூகம்பத்தால் ஃபுக்குஷிமா அணு உலைக்கோ அல்லது டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தின் ஓடு பாதைகளுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப் பட்டுள்ள போதும் டோக்கியோவுக்கும் ஒசக்காவுக்கும் இடையே செயற்பட்டு வரும் அதிவேக புல்லட் ரயில் சேவை மின் பாதிப்புக் காரணமாகத் தற்காலிகமாகத் தடைப் பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. அமெரிக்கப் புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS இன் அறிக்கைப் படி 7.8 ரிக்டர் அளவு கொண்ட இந்த நில நடுக்கம் டோக்கியோவில் இருந்து சராசரியாக 874 Km தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தின் தகவல் படி குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5 ஆகப் பதியப் பட்டதாகவும் இது பசுபிக் சமுத்திரத்தில் 696 Km ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer