Sunday, May 31, 2015

நேற்று சனிக்கிழமை நண்பகல் வடக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் அமைந்துள்ள அல்ஹாஜி ஹாருனா என்ற மசூதிகுள் நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 29 பேர் பலியாகியும் இன்னும் பலர் படுகாயம் அடைந்தும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருவது அதிகமாகியுள்ளது.

முன்னதாக சவுதி அரேபியாவின் ஷைட்டி முஸ்லிம்களின் இரு மசூதிகள் மீது ISIS போராளிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தியதிலும் பலர் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் நைஜீரியாவின் புதிய அதிபராகக் கடந்த வெள்ளிக்கிழமை முஹமது புகாரி பதவியேற்ற பின் அங்கு போக்கோ ஹராம் போராளிகளால் மேற்கொள்ளப் பட்ட மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக பள்ளி வாசல் மீதான இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. நைஜீரியாவில் ஷரியா சட்டத்தின் படி இஸ்லாமிய மதவாத அடிப்படையிலான ஆட்சியை நிறுவும் நோக்கில் போராடி வரும் போக்கோ ஹராம் போராளிகள் அங்கு இவ்வாறான தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக் கணக்கான மக்களைக் கொலை செய்து வருகின்றனர். அண்மையில் தான் போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைதுகுரியில் இவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.

இதேவேளை கிழக்கு சவுதி அரேபியாவின் டம்மாம் நகரிலுள்ள மசூதி மீது சமீபத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட போது தன்னை புர்கா எனப்படும் ஆடையால் முழுமையாக மூடி மசூதிக்குள் நுழைய முயன்ற தற்கொலைக் குண்டுதாரியை உடனே சந்தேகித்து நுழை வாயில் இருந்து உள்ளே புக முடியாத படி ஒரு மாணவர் தடுத்துள்ளார். இப்போராட்டத்தின் போது குண்டு வெடித்ததால் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த மாணவர் அமெரிக்காவின் கன்சாஸ் கல்லூரியில் மின் இலத்திரனியல் படித்து வந்த அப்துல்ஜலீல் அலர்பஷ் என அடையாளம் காணப் பட்டதுடன் தனது சாகசச் செயலுக்காகவும் நூற்றுக் கணக்கானவர்களது உயிரைக் காப்பாற்றியமைக்குமாக அம்மாணவர் தற்போது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஹீரோவாகப் புகழப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer