Wednesday, April 29, 2015

'கணினி உலகின் சூப்பர் ஸ்டார் விண்டோஸ். இதை தெரியவில்லை என்பவருக்கு தேவை குண்டாஸ்' - என வேடிக்கையாக சொல்வார்கள். பிராண்ட் பேர்களிலே பிரபலமானது விண்டோஸ். கணினி என்றாலே விண்டோஸ் - விண்டோஸ் என்றாலே கணினி' என நீயின்றி நானில்லை - நானின்றி நீயில்லை என்ற பெருமை ஸ்மார்ட்போன் வந்த காலத்தில் மங்கத் தொடங்கியது.

ஆண்ட்ராய்ட் போன்களின் அசுர வளர்ச்சியில் நிலை குலைந்த விண்டோஸ், அந்த தாக்கத்தில் அறிமுகப்படுத்திய வின்டோஸ்-8 மைக்ரோசாப்ட்டை 'படுத்தி' விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். Desktop கணினிகளில் 'User friendly' என்பதற்காக வாங்கப்பட்ட விண்டோஸ் startup, programe files, shut down போன்ற மெனுக்கள் டெஸ்க் டாப்பில் காணாதது கண்டு பலர் அதிர்ச்சியுறும் வண்ணம் இருந்தது அதன் தோல்வியின் முதல் படி ஆகி விட்டது.

விண்டோஸ்-8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்து, மைக்ரோசாப்ட் தற்போதைய, நுகர்வோருக்கான windows-10 சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. ''விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் சிஸ்டத்தை தேர்ந்தெடுத்து, அதனை நேசிக்கும் மக்களை நோக்கி நாம் நகர்வோம்'' என்று விண்டோஸ் சிஸ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி அன்பு பெருக்கோடு கூறுகிறார், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா.

பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ்-10 இயங்குமா? என இனி தெரியும்.

சிறப்பு அம்சங்கள்

மைக்ரோசாப்ட் விண்டோஸ்-10 சிஸ்டத்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் முதல் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் இணையானதாக தர இருக்கிறது. இவற்றில் இயங்கும் இடை முகங்களும் (Interface) ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைய இருக்கின்றன. இதனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ்-10ல் தொடங்கிய வேலையை, போனில் தொடரலாம். அதேபோல, போனில் தொடங்கிய வேலையை, டேப்ளட் பி.சி.யில் இயக்கலாம். அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வரும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் வெகு காலமாக எண்ணி வந்து, இப்போது ஈடேற்றியுள்ளது. இதன் மூலம், மொபைல் கம்ப்யூட்டிங் உலகில் கோலோச்சி வரும், கூகுள் ஆதரிக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சிஸ்டங்களின் வாடிக்கையாளர்களைத் தன் பிடிக்குள், விண்டோஸ் சிஸ்டம் மூலம், தன் குடைக்குள் கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ள கார்டனா (Cortana digital assistant) விண்டோஸ்-10 சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார்டனா இப்போது முழுமையாக, செறிவான திறன் பெற்றுள்ளது. மேப்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நம் டிஜிட்டல் உதவியாளராகச் செயல்படும். நாம் டைப் செய்தோ, அல்லது குரல் வழியாகவோ, பைல் ஒன்றைத் தேடலாம்.

Internet explorerக்கு குட் பை சொல்லி விட்டது மைக்ரோசாப்ட். புதிய பிரவ்சர் 'ஸ்பார்டன் பிரவுசர்'. இதனை நவீன தொழில் நுட்பத்தில், புதிய கூடுதல் வசதிகளுடன் மைக்ரோசாப்ட் வடிவமைத்துள்ளது

மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை வழங்கும் போதெல்லாம், அது மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறதென்றும், அதனால், சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்றும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. அது உண்மையே. அதனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ்-7 முதல், இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக்கொண்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மிகச் சிறியதாக அமைத்து, வேகமாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொண்டது. விண்டோஸ்-10 சிஸ்டத்திலும், இந்த இலக்கு அழகாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் மேலும் பல வசதிகளையும் தருகிறது. அந்த வகையில் முதலில் நாம் சந்திப்பது ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் அது சார்ந்த அப்ளிகேஷன்கள் ஆகும். உலகிலேயே முதன்முதலாக, 'ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் இயக்க மேடை'யை, மைக்ரோசாப்ட் அமைக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள், முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைக்கலாம். இதற்கான தலை அணிகலனை மாட்டிக் கொண்டு, விண்டோஸ்-10 சிஸ்டம் வழங்கும் ஹோலோ லென்ஸ் தொழில் நுட்பத்துடன் இணைந்து, ஹோலோ கிராபிக் உருவங்களை, நம் நிஜ உலகில் உலவவிடலாம்.

இலவசமாய்ப் பெறலாம்

முதலாவதாக, பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ்-10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ்-10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிடலாம்.

விண்டோஸ்-10 புரட்சி படைக்குமா இல்லை, பத்தோடு பதினொன்றாக இருக்குமா? 'நாளை எனது நாள்' என பறைசாற்றும் மைக்ரோசாப்ட்டின் சவால் பலிக்குமா? என்பதை காலம் சொல்லும்!

-ஷான்

0 comments :

Post a Comment

 
Toggle Footer