Thursday, February 26, 2015

சமீப காலமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உட்பட பல வெளிநாட்டவரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாக அவர்களை சிரச்சேதம் செய்து அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் ISIS வெளியிட்டு வந்தது.

இவ்வீடியோக்களில் கருப்பு நிற ஆடையை அணிந்து முகத்தையும் முற்றாக மறைத்து பிரிட்டிஷ் உச்சரிப்புடன் அச்சுறுத்தல் செய்தியை விடுத்து வந்த ஜிஹாதி ஜோன் என்ற நபரது அடையாளத்தைத் தாம் இனம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.

இந்த ஜிஹாதி ஜோன் குவைத்தில் பிறந்து இலண்டனில் வசித்து வந்த மொஹம்மெட் எம்வாஷி ஆவார் என இரு அமெரிக்க அதிகாரிகளும், காங்கிரஸ் துறையைச் சேர்ந்த இரு நபர்களும் தெரிவித்துள்ளனர். எம்வாஷியின் நெருங்கிய நண்பர்கள் தரப்பில் இருந்து இத்தகவல் பெறப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ராய்ட்டர் செய்தி ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து CAGE என அழைக்கப் படும் இலண்டனிலுள்ள முஸ்லிம் ஒருவரால் நடத்தப் படும் மனித உரிமைகள் ஆலோசனை அமைப்பு கூறுகையில், பிரிட்டன் பாதுகாப்பு சேவைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமக்கும் எம்வாஷிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக தெரிவித்திருந்தது. மேலும் ISIS இன் சிரச்சேத வீடியோக்களில் கையில் கத்தியுடன் அச்சுறுத்தல் செய்தி விடுத்து வரும் மனிதருக்கும் 26 வயதாகும் எம்வாஷிக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை இருப்பது புலனாகி இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் ஜிஹாதி ஜோனின் அடையாளப் படுத்துதல் குறித்து இலண்டன் மெட்ரோபாலிட்டன் போலிஸ் எந்தவிதக் கருத்தையும் கூற மறுத்து விட்டது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இலண்டன் போலிஸின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் கமாண்டெர் ரிச்சர்ட் வால்ட்டொன் கூறுகையில், ஆபத்து விளைவிக்கக் கூடிய ஜிஹாதி ஜோனின் அடையாளம் குறித்த எமது விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் எனத் தாம் முன்னர் ஊடகங்களுக்கு அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை CNN ஊடகத்துக்குப் பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்தின் பேச்சாளர் இது குறித்துத் தகவல் அளிக்கையில் ஜிஹாதி ஜோன் குறித்த தற்போது வெளியாகியுள்ள அடையாளப் படுத்துதலை நாம் உறுதி செய்யவோ அல்லது மறுத்துரைக்கவோ மாட்டோம் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer