Friday, February 27, 2015

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக ஸ்ரீசாந்தின் சகோதரர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட ஆயுட்கால தடை விதித்தது.

மேலும், சூதாட்ட புகார் தொடர்பாக, ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சிறைக்குள் வைத்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மலையாள பத்திரிகை ஒன்றில் இன்று ஸ்ரீசாந்த் சகோதரரும், பின்னணி பாடகருமான மது பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் இத்தகவலை அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சிறைக்குள் ஒரு ரவுடி ஸ்ரீசாந்த்தை இரும்பில் உருவான கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அதிருஷ்டவசமாக ஸ்ரீசாந்த் உயிரோடு தப்பினார்.

பின்னர் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு அளித்த புகாரின்பேரில், வேறு சிறைக்கு அந்த ரவுடி மாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான உண்மைகளை மறைக்க நடந்த கொலை முயற்சியா என்பது பற்றியோ, அந்த ரவுடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றியோ இப்போது வரை ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் சகோதரர் மது பாலகிருஷ்ணன் கொடுத்த இந்த பேட்டி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer