Thursday, February 26, 2015

''நேருக்கு நேர்’ பட ஷூட்டிங் அப்ப, ஒரு சீன்ல பைக்ல இருந்து நாம ரெண்டு பேரும் உண்மையிலேயே கீழே விழுந்துட்டோம். ஆனா, நடிக்கிறோம்னு நினைச்சுக்கிட்டு கட் சொல்லாம தொடர்ந்து ஷூட் பண்ணினாங்களே... ஞாபகம் இருக்கா?’ - இது, விஜய்யிடம் சூர்யா.

'மணி சார் 'ரோஜா’ பட ரிலீஸ் டென்ஷன்ல இருந்தப்ப, 'அந்தப் படம் நம்ம வாழ்க்கையையே மாத்தப்போகுது’னு புரியாம சும்மா ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருந்ததை இப்போ நினைச்சா... சான்ஸே இல்லை!’ - இது ஏ.ஆர்.ரஹ்மானிடம் அரவிந்த்சாமி.

'சார் 'புலி’ முடிஞ்சுருச்சாம்ல. 'மாஸ்’கூட ரிலீஸ் பண்ணிடாதீங்க!’ - இது விஜய்யிடம் வெங்கட் பிரபு.

'குழந்தைகள், அவங்க படிப்புனு பரபரப்பா ஓடிட்டே இருக்கேன். இந்தப் படம் ஓ.கே ஆனா, தொடர்ந்து நடிப்பேனானு தெரியலை... பார்ப்போம்!’ - இது அனைவரிடமும் ஜோதிகா.

கல்லூரிப் படிப்பு முடித்து பல வருடங்கள் கழித்துச் சந்தித்த முன்னாள் மாணவர்களின் ரீயூனியன்போல நெகிழ்வும் மகிழ்வுமாக அரங்கேறியது, 90-களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபலங்களின் சர்ப்ரைஸ் சந்திப்பு. நடிகர்கள் விஜய், சூர்யா, அரவிந்த் சாமி, ஜெயராம், இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், சுந்தர்.சி, வெங்கட் பிரபு, நடிகைகள் மீனா, ஜோதிகா, சிம்ரன், சங்கீதா, மகேஸ்வரி, ரோஜா... இவர்களோடு ஏ.ஆர்.ரஹ்மான் வந்து சேர, தமிழ் சினிமாவின் பிரமாண்டமான கொண்டாட்டமாக அரங்கேறியது அந்தச் சந்திப்பு. அதில், 'நான் 80-ஸ் ஆளா இருந்தாலும் இந்த ரீயூனியன்ல கலந்துக்குவேன்’ என காமெடி அடாவடி செய்த ஒருவரைப் பற்றி... கடைசி பாராவில்!

மெழுகுவத்தி வெளிச்சத்தில் தகதகத்த கேக்கின் நடுவில் 'நாட்டி 90’ என்ற வாசகம். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் உயர்வெளிச்சத் துளிகள் இங்கே...

''80-ஸ் ரீயூனியனுக்குப் போயிருந்தப்ப, 'இப்படி 90-ஸ் ஆட்கள் எல்லாம் சந்திச்சா நல்லா இருக்கும்’ல மீனா கேட்டாங்க. 'பண்ணலாமே’னு சுந்தர்.சி பதில் சொன்ன நிமிஷம்தான் இந்தச் சந்திப்புக்கான ஆரம்பம். முதல் சந்திப்புங்கிறதால ரொம்பச் சின்னதா திட்டமிட்டோம்!'' என்று சிரிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

''அப்ப எல்லாம் இயக்குநர்களுக்கு வொயிட் அண்ட் வொயிட்தான் யூனிஃபார்ம் மாதிரி காஸ்ட்யூமா இருந்தது. அதனால 'இந்த ரீயூனியனுக்கு எல்லாரும் வொயிட் அண்ட் வொயிட்லதான் வரணும்’னு சொல்லிட்டாங்க. திணறிட்டோம். இப்ப எல்லாம் விழாக்களில் கலந்துக்கக்கூட யாரும் வெள்ளை டிரெஸ் போடுறது இல்லை. எங்கேயும் எப்போதும் ப்ளூ ஜீன்ஸ்னு ஆகிடுச்சே!'' என்ற பார்த்திபனிடம், 'ஆமாப்பா... நான் தேடினப்ப வொயிட்ல கேவலமா ஒரு பேன்ட்தான் கிடைச்சது. சிரமம் புரியாம சொல்லிட்டோமேனு அப்பத்தான் புரிஞ்சது!’ என ஆமோதித்தார் கே.எஸ்.ரவிகுமார்.

ரங்கோலி வண்ண ஆடையில் வந்த மகேஸ்வரி, வெள்ளை நிற துப்பட்டாவை அணிந்து சமாளித்தார். 'நல்லவேளை... ஒரு வெள்ளை கர்ச்சீஃப் மட்டும் கையில வெச்சுட்டு, 'வொயிட் அண்ட் வொயிட்ல வந்துட்டேன்’னு சொல்லாம விட்டாங்களே!’ இது, பார்த்திபனின் அக்மார்க் குறும்பு.

'நான் 1989-ல் அறிமுகமானேன். 'வருஷக் கடைசி’னு சொல்லி என்னை 80-ஸ் குரூப்ல சேர்க்கலை. இப்போ 90-ஸ் குரூப்ல சேர்த்தது ரொம்ப சந்தோஷம். எல்லாரையும் சேர்க்கிறதும் கோக்கிறதும்தான் ரொம்பக் கஷ்டம். ஆனா, வந்து நின்னுட்டா திருவிழாக் கோலமா இருக்கு. இனி மாசம் ஒரு தடவைகூட சந்திக்கலாம்னு தோணுது. ஆனா, சும்மா 'ஸ்வீட், காரம், காபி’னு சந்திப்பு முடிஞ்சுராம, ஏதாவது நல்ல காரியம் பண்ணணும். ஆளுக்குக் கொஞ்சம் பணமும் நிறைய மனசும் போட்டோம்னா அதையும் செஞ்சுடலாம்!’ என்ற பார்த்திபனின் எண்ணத்துக்கு அனைவரிடமும் விழுந்தது லைக்ஸ்.

சந்திப்புக்குக் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார் விஜய். 'தொடர்ந்து ஷூட்டிங் போயிட்டே இருக்கு. ரொம்ப லேட்டாத்தான் வீட்டுக்கே வந்தேன். 'இனிமே எதுக்குப் போயிட்டு? அடுத்த ரீயூனியனுக்குப் போயிக்கலாம்’னு நினைச்சுப் படுத்துட்டேன். ஆனா, மனசு கேக்கலை. 'எல்லாரையும் ஒரே இடத்துல சந்திச்சுப் பேசுனா... எவ்ளோ நல்லா இருக்கும்?’னு தோணுச்சு. எந்திரிச்சு ஓடிவந்துட்டேன். வரலைன்னா... நிச்சயம் இந்த அனுபவத்தை மிஸ்பண்ணிருப்பேன்!’ - இது விஜய்யின் நெகிழ்ச்சி.

விஜய், சூர்யா இருவரும் சேர்ந்து நடித்த 'நேருக்கு நேர்’, 'ஃப்ரெண்ட்ஸ்’ படப்பிடிப்பு சுவாரஸ்யங்கள் பற்றி பேச்சு நீண்டது.

'எங்ககிட்ட கேள்வியா கேக்கிறீங்களே... நீங்க, உங்க முதல் படத்தைப் பத்திச் சொல்லுங்க!’ என வெங்கட் பிரபு பக்கம் கோல் அடித்தார் சூர்யா. அப்போது சங்கீதா கபகபவென சிரிக்க, 'போதும்... போதும்’ என செல்ல அதட்டல் போட்டுவிட்டுத் தொடர்ந்தார் வெங்கட். 'என் முதல் படத்துல சங்கீதாதான் எனக்கு ஜோடி. படம் பேர் 'பூஞ்சோலை’. அந்தப் படம் மட்டும் வந்திருந்தா நான் 'மாஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிருக்க முடியாது. ஏன்னா, நான் பரபரப்பான நடிகனா ஆகியிருப்பேன். உங்க நல்ல நேரம்... அந்தப் படம் ரிலீஸ் ஆகலை!’ எனச் சொல்லிவிட்டு இப்போது வெங்கட் பிரபு பகபகவென சிரிக்க, மற்ற அனைவருக்கும் தொற்றிக்கொண்டது அந்தச் சிரிப்பு.

'கடைசி நிமிஷத்துல முடிவுபண்ணதால சிலரைப் பத்திதான் வீடியோ பண்ண முடிஞ்சுது. மத்தவங்களைப் பத்தி அடுத்தடுத்த சந்திப்புல ஸ்கிரீன் பண்ணலாம்!’ என அறிவித்தார் கே.எஸ்.ரவிகுமார். தொடர்ந்து பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் ஆகிய மூவரின் சினிமா வாழ்க்கை, ஒரு குட்டி வீடியோ தொகுப்பாக ஒளிபரப்பானது.

'90-ல் நான் அறிமுகம். ஆனா, முதல் படத்துக்கும் ரெண்டாவது படத்துக்கும் பெரிய கேப். ஆனா, இத்தனை வருஷங்கள் கழிச்சும் ஃபீல்டுல இருக்கிறது ரொம்ப சந்தோஷம்!’ என உருகி மருகினார் சுந்தர்.சி.

''ரோஜா’ படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்த்துட்டு வெளியே வரும்போது தியேட்டர் வாசல்ல நீங்க நின்னுட்டு இருந்தீங்க. உங்ககிட்ட கை கொடுத்து, 'ஆல் தி பெஸ்ட்’ சொல்லிட்டுப் போனேன். அது ஞாபகம் இருக்கா சார்?’ என, அரவிந்த் சாமியிடம் கேட்டார் சூர்யா. 'நிஜமாவா... என்னைப் பார்த்தீங்களா? எனக்கு ஞாபகம் இல்லையே! அப்ப நீங்க என்ன படத்துல நடிச்சுட்டு இருந்தீங்க?’ என ஆச்சர்யப்பட்டார் அரவிந்த் சாமி. 'நான் அப்போ நடிக்கவே வரலை சார். 'ரோஜா’ பார்த்துட்டு நீங்க படத்துல போட்டிருந்த மாதிரி சிவப்பு கலர் சட்டையை வாங்கிப் போட்டுக்கிட்டேன் சார்’ என்ற சூர்யாவை அணைத்துக்கொண்டார் அரவிந்த் சாமி. ஜெயராம், படப்பிடிப்பு சுவாரஸ்யங்களையும், மோகன்லால் - மம்மூட்டியுடான திரை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

'குழந்தைங்களை அவங்க தாத்தா-பாட்டிகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். நாளைக்கு ஸ்கூலுக்கு அவங்க சீக்கிரம் போகணும். நான் சீக்கிரம் கிளம்பவா?’ என, பொறுப்பான 'அம்மா’வாக பரபரத்துக் கொண்டே இருந்தார் ஜோதிகா.

'இந்த ரீயூனியன்ல உங்க சினிமா ரீஎன்ட்ரிதான் ஹைலைட் மேடம். திரும்ப நடிக்கிறது எப்படி இருக்கு?’ என வெங்கட் பிரபு கேட்க, ஜோதிகா முகத்தில் வெட்கப் புன்னகை. 'ஜாலியா... சந்தோஷமா இருக்கு. ஆனா, குழந்தைங்களைப் பார்த்துக்கவே நிறைய நேரம் தேவைப்படுது. அதனால அடுத்தடுத்து நடிக்க முடியுமானு தெரியலை. 'ஹவ் ஓல்டு ஆர் யூ?’ மாதிரி எனக்குப் பொருத்தமான கதைகளா இருந்தா யோசிக்கலாம்!’ என்ற ஜோதிகாவின் எண்ணத்தை அனைவரும் ஆரவாரக் கைதட்டல் மூலம் ஆமோதித்தனர்.

அந்தச் சங்கமத்தில் 'தலைவி... தலைவி...’ என எல்லோரும் கொண்டாடியது மீனாவைதான்! அதற்கேற்ப, 'அடுத்த ரீயூனியன் சந்திப்புக்கு இன்னும் நிறையப் பேர் வருவாங்க. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல சந்திப்போம். அதுக்கு நடுவுல, எல்லாரும் சேர்ந்து என்ன நல்ல காரியம் பண்ணலாம்னு முடிவெடுத்திருவோம்!’ என்று, ரீ-யூனியன் கிளப்பின் வருங்காலத் திட்டங்களை அடுக்கினார் மீனா.

'நானும் 90-ஸ் பார்ட்டிதான்!’ என அடம்பிடித்த அந்த சீனியர்... மனோபாலா. 'நானும் 90-ஸ்தான்!’ என வான்டடாக வந்தவரிடம், 'அதெல்லாம் ஒப்புக்கவே மாட்டோம். நீங்க 80-ஸ்தான்!’ எனச் சொல்லியிருக்கிறார்கள். 'யப்பா... நான் டைரக்டரானது வேணும்னா 80-ஸா இருக்கலாம். ஆனா, நான் நடிகனானது 90-ஸ்லதான்... அதுவும் கே.எஸ்.ரவிகுமார் படத்துலதான். அதனால நானும் இந்த ஜமாவில் சேர்ந்துக்குவேன்!’ என மனோபாலா மல்லுக்கு நிற்க, 'அவர் 90-ஸ்தாங்க. ஆனா, 1890...’ என பார்த்திபன் கலாய்க்க... வெடிச் சிரிப்பில் பார்ட்டி கலகலக்க...

'2k’ கிளப்’... என்னப்பா பண்றீங்க?

ம.கா.செந்தில்குமார்
vikatan

0 comments :

Post a Comment

 
Toggle Footer