Sunday, January 18, 2015

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி கிராமம் ஆயன்குளம் படுகை பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 2 அதிசய கிணறுகள் உள்ளன.

ஒரு மாத காலம் இந்த அதிசய கிணறுகளில் கால்வாய் தண்ணீரை திருப்பி விட்டாலும் நிரம்புவது இல்லை என்று கூறப்படுகிறது.

குற்றால அருவிபோல் கொட்டும் கால்வாய் தண்ணீரை அப்படியே உள்வாங்கி நிலத்தடிக்குள் அனுப்பி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வேலையை இந்த கிணறுகள் செய்கின்றன.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவியதால் கிணற்றை ஆழப்படுத்தியுள்ளனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை அப்படியே பூமி உள்வாங்கிக் கொண்டதை மக்கள் அறிந்துள்ளனர்.

அதன் பின்பு எவ்வளவு மழை பெய்தாலும், காட்டு வெள்ளம் கிணற்றில் விழுந்தாலும், அந்த தண்ணீர் அனைத்தையும் சுவடே தெரியாமல் கிணறு உள்வாங்கிக் கொண்டதாக மக்கள் அதிசயிக்கின்றனர்.

இந்த கிணறுகள் நிரம்பவில்லையே தவிர அக்கம்பக்கத்தில் உள்ள கிணறுகளில் வழக்கமாக இருக்கும் நீர்மட்டத்தைவிட மேலும் 10 அடி வரை தண்ணீர் உயர்ந்து இருந்தது.

இந்த அதிசய கிணறுகள் பற்றி ராதாபுரம், திசையன்விளை பகுதிகளில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுபற்றி அந்த அதிசய கிணற்றின் உரிமையாளர் சண்முகவேல் பாண்டியன் கூறுகையில், கால்வாய் மூலம் இந்த கிணறுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் விழுந்தால், சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அனைத்து கிணறுகளிலும் நீர்மட்டம் நன்றாக உயருகிறது.

முன்பு ஒரு முறை கிணற்றில் விழுந்த தண்ணீருடன், கழுத்தில் அணியக்கூடிய பாசிமணிகளை கொட்டி சோதனை செய்தோம்.

அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் தேரிக்காட்டில், உவரி காரிகோவில் பம்புசெட் கிணற்றில், அந்த பாசிமணிகள் மிதந்தன.

எனவே இந்த கிணற்றில் விழும் தண்ணீரானது, நிலத்தடி நீராக ஓடி பல இடங்களுக்கு செல்கிறது என்பதை அறிந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer