Wednesday, December 31, 2014

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக உள்ள டோனி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளார்.

டோனி நேரம் முடிந்து விட்டது

தற்போது நடந்து வரும் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கோஹ்லி தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் சொதப்பியது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் இயான் சாப்பல் தெரிவித்தார்.

வரலாறு படைப்போம்

கடந்த 2011ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா, 2வது போட்டியில் தோற்றது. இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம் என்று அணித்தலைவர் டோனி கூறினார். ஆனால் இந்த தொடர் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சொதப்பிய அணி: ஜொலித்த டோனி

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட டோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. டோனி மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டம் அணித்தலைவருக்கே அவபெயரை பெற்று தந்தது.

டக்-அவுட் சாதனை

இந்திய அணித்தலைவர் டோனி இதுவரை 8 முறை ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆதெர்டன், தென் ஆப்பிரிக்காவின் குரோஞ்சி ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டார். இதை அவுஸ்திரேலிய தொடரில் நிகழ்த்தினார்.

சச்சினை வழியனுப்பி கிண்ணம் வென்ற டோனி

கடந்த ஆண்டு மும்பையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது டோனி தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரோடு சச்சின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இமாலய ஓட்டங்களை எட்டிய இந்தியா

கடந்த 2009ம் ஆண்டு சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி தலைமையில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 726 என இமாலய ஓட்டங்களை எட்டியது. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றதோடு தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

சங்கக்காராவுக்கு செக் வைத்த டோனி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா வைத்திருந்த 133 ஸ்டெம்பிங் என்ற சாதனையை டோனி சமன் செய்துள்ளார்.

கண்ணீர் விட்ட டோனி

டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்னதாக வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தனது சகாக்களிடம் ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார். அப்போது அவரையும் அறியாமல் கண்கலங்கியுள்ளார்.

ஓய்வு அறிவித்த டோனி

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை டிரா செய்தார். டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தொடர் சறுக்கலால் திடீரென்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer