Saturday, December 27, 2014

‘காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கிவிடாது..
மங்கை நெஞ்சம்
பொங்கும்போது விலங்குகள் ஏது?''

-கங்கையாய் பிரவாகம் எடுத்து ஓடும் பெண்களின் மனதை சங்குக்குள் அடைக்கும் முயற்சியில் தனி முத்திரைப் பதித்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். தமிழ்ச் சினிமாவில் நாற்பதாண்டுகள் பணியாற்றிய நிலையிலும் இறுதிவரை இளைஞராக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியாவின் பிரதான மொழிகளில் 100 படங்களை இயக்கி முடித்து, கடைசி வரை ‘நாட் அவுட் பேட்ஸ் மேனாக’ மட்டையை உயர்த்திக் காண்பித்து, களத்தில் நின்று நிதானித்து ஆடியவர்.

‘மை ஃபிலிம் இஸ் மை மெசேஜ்’ என்று தனது திரைப்படங்களில் பட்டவர்த்தனமாக சொன்னவர். தமிழ்ச் சினிமாவில் இவரது படைப்புகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான பரீட்சார்த்தமான முயற்சிகள். அவை வந்த கால கட்டத்தைத் தாண்டி சிந்திக்கப்பட்டவை.

கமல், ரஜினி என்ற இரண்டு சகாப்தங்களையும் தந்தவர் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இவரது படங்களில் சித்தரிக்கப்பட்ட பெண் கதா பாத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சைவிட்டு நீங்காதவை. இன்றளவும் தொலைக்காட்சியில் இவரது படங்கள் ஒளிப்பரப்பாகும்போது நம்மை அறியாமலே ரிமோட்டை கீழே வைத்துவிடுகிறோம். பலமுறை பார்த்த படம் என்றாலும், நம்மை அறியாமல் அந்த பாத்திரங்கள் கட்டிப் போட்டுவிடும் வலிமை வாய்ந்தவை.

பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், அவர்களின் சமூகக் கோபங்களையும் பெண்களைவிட மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தி வெற்றி கண்டவர். பெண்களின் உளப்பாங்கை எழுத்தில் கொண்டு வந்தவர் எழுத்தாளர் பாலக்குமாரன் என்றால், அவருக்கு முன்பே அதை செலுலாயிடில் பதிவு செய்தார் கே.பி.

‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாதான் இன்றைய எல்லா சீரியல் நாயகிகளுக்கும் தாய். அதைத் தொடர்ந்து, ‘அரங்கேற்றம் லலிதா’, ‘அபூர்வராகங்கள் பைரவி’, ‘மரோசரித்ரா ஸ்வப்னா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு தேவி’, ‘நினைத்தாலே இனிக்கும் சோனா’, ‘சிந்துபைரவி சிந்து’, ‘மனதில் உறுதி வேண்டும் நந்தினி’, ‘புதுப்புது அர்த்தங்கள் கீதா என்று இவரது பெண் கதாபாத்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஏனென்றால் பாத்திரத்தின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் கனம் வாய்ந்தவை.

தமிழ்ச் சினிமாவில் அந்த காலம் தொட்டு இந்த  காலம் வரை, நம் இயக்குநர்கள் சிருஷ்டித்து வைத்திருக்கும் பெண்களின் பிம்பம் அலாதியானது. பொதுவில் ஹீரோவுக்கு, ஹீரோயின் ஒரு சப்போர்ட்டிங்க் ஆர்ட்டிஸ்ட்டாகவும், பலவேளைகளில் ஹீரோ ரிலாக்ஸ்டாகப் பாடித் திரியும் ஜோடியாகவும்தான் வருகிறார். இது படம் பார்க்கும் ரசிகர்களும் தங்களின் ஆதர்ஷ ஹீரோயின்களுடன், தாங்களும் கனவு ஸீனில் டூயட் பாடவே உதவி இருக்கிறது. ஒரு வேளை படமாக்கப்பட்ட விதம் சரியாக இல்லாமல் இருந்தால், ஹாரிடாரில், ‘தம்’ அடித்துவிட்டு வர உதவியிருக்கிறது.

பெண் அடக்கமானவளாய், கணவனுக்காக, காதலனுக்காக சர்வபரி தியாகத்துக்கும் தயாரானவளாகவே காண்பிக்கப்பட்டு வந்தாள். இதை எல்லாம் தாண்டி பெண்ணினத்தின் பெருமையை பெண்களின் நளினத்தை சுந்தரவதனத்தை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஸ்ரீதர், பீம்சிங், கே.எஸ்.ஜி, ஏ.பி.என். என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், ‘மாத்தி யோசி’ என்கிற விதமாக உண்மை, நேர்மை, மனவலிமை மிக்க பெண் கதா பாத்திரங்களை கே.பி.யைப் போல் வேறு எவரும் படைத்துக் காண்பிக்கவில்லை.

திரைப்படத் துறையில் கோலோச்சிய கே.பி.சுந்தராம்பாள், பத்மஸ்ரீ.பானுமதி இருவரும் சுதந்திரமும், ஆளுமையும் மிக்க நட்சத்திரங்களாக திரை உலகில் வலம் வந்தார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்பாக எப்படி இருந்தார்களோ அதே கேரக்டரில்தான் கேமராவுக்குப் பின்பாகவும் இருந்தார்கள். சுதந்திரமாகவும், சுயமாகவும், தெளிவாகவும் முடிவு எடுக்கும் அற்புதமான இந்த வகை பெண்ணாக முதன்முதலில் தோன்றி அசத்திய பாத்திரம், ‘அவள் ஒரு தொடர் கதை கவிதா’ தான்.

பொறுப்பற்ற தந்தையால் அல்லல்படும் நடுத்தர வர்க்க குடும்பம். தங்கைகள் மற்றும் தம்பிகளின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை மெழுகாக உருக்கிக்கொள்ளும் வித்தியாசமான கதாபாத்திரம். தமிழ்நாட்டின் ஏ, பி, சி என்று அனைத்து சென்டர்களிலும் உள்ள பெண்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட படம். இன்னமும் தன் குடும்ப மேம்பாட்டுக்காக எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் சிலிப்பர் செருப்பும், கைப்பையுமாக பணிக்குப் போகும் எத்தனையோ மூத்த பெண்களுக்கு இந்த கவிதா பாத்திரம்தான் ஆதர்ஷ குறியீடு.

ஆனால், ‘அவள் ஒரு தொடர் கதை’யின் வெற்றி கே.பி.க்கு வேறு விதமான புதிய சிக்கலைத் தோற்றுவித்தது. வித்தியாசமான கதைகளை, கதைக் களன்களை பின்புலமாகக் கொண்ட படங்களை இயக்கி தனது முத்திரையைப் பதிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.

ஏற்கனவே, ‘சர்வர் சுந்தரம்’, ‘நாணல்’, ‘நீர்க்குமிழி’, மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘நூற்றுக்கு நூறு’, ‘வெள்ளி விழா’, ‘நான் அவனில்லை’ என்று வித்தியாசமான பல கதைகளைப் படமாக்கி இருந்தாலும், அவள் ஒரு தொடர்கதைக்குப் பின் அவரது பாதையிலும், படங்களிலும் நிறையவே மாற்றங்கள் வரத் தொடங்கின.

‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவர்கள்’, ‘மரோ சரித்ரா’, ‘தப்புத் தாளங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நூல் வேலி’, ‘நிழல் நிஜமாகிறது’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘சிந்துபைரவி’, ‘புன்னகை மன்னன்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, மற்றும் ‘வானமே எல்லை’ என்று அவரது பயணம் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு படமும் அவருக்கே அவருக்கான முத்திரையுடன் கூடிய செலுலாய்டு சித்திரங்கள்.

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதுக்கு சரியென்று பட்டதைப் படமாக்கி வந்ததை அவரது எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். ‘எந்தவித வர்த்தக சமரசமும் செய்துகொள்ளாமல் நான் என் படைப்பை தந்துள்ளேன்’ என்று அநேகர் இன்றைக்கு வேண்டுமானால் எல்லோரும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கும்... ‘ஒன் அண்டு ஒன்லி’ கே.பி மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால், இத்தகையை ரசிகர்களை தயார் செய்யவும், இத்தனை இளம் இயக்குநர்களுகு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்ததும் இவர்தான்.

எழுபதுகளின் மத்தியில் வந்த ‘அவள் ஒரு தொடர் கதை சுஜாதா’ பாத்திரத்தின் தொடக்கப் புள்ளி ‘இருகோடுகள்’ சௌகார் ஜானகிதான். கண்டிப்பு, வைராக்கியம்,  தியாகம், கோபன் என்று கே.பி பின்னாளில் படைத்த அநேக கதாபாத்திரங்களின் தாய் பாத்திரம் இந்த ஜானகி பாத்திரம்,.

இதற்கு நேர் கான்ட்ராஸ்ட்டாக கே.பாலசந்தரின் இன்னொரு படைப்பு பொசஸ்ஸிவ் நேச்சர் கேரக்டர். இதற்கும் தாய் பாத்திரம் இருகோடுகள் ஜெயந்திதான். இந்த பாத்திரத்திற்கு கணவனைத் தாண்டி வேறு உலகம் இல்லை. அவன் தனக்குத்தான், தனக்கு மட்டும்தான் என்று எண்னுகிற ரகம்.

புதுப்புது அர்த்தங்கள் கீதா, பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்களில் சிறந்த கதாபாத்திரம். இந்த வகை ‘பொசஸ்ஸிவ் நேச்சர்’ பெண்களை மணந்த கணவர்களைப் போன்று புண்ணியம் செய்தவர்களும் கிடையாது, பாவம் செய்தவர்களும் கிடையாது. ரகுமான், கீதா, சித்தாரா ஆகிய மூன்று பேரையும் கொண்டு வண்ணத்தில் எழுதப்பட்ட நேர்த்தியான கவிதை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ், மனநல காப்பகத்தில் இருந்து கீதாவை மீட்பது போல் முடியும். இந்த கீதாவின் முடிவில்தான், ‘அக்னி சாட்சி’ படம் தொடங்கும். ஆனால், ‘அக்னி சாட்சி’ வந்து பல ஆண்டுகள் கழித்துதான் ‘புதுப்புது அர்த்தங்கள்’ வந்தது. கே.பி என்னும் படைப்பாளியின் மனதில் இந்த பாத்திரங்கள் முன்னும்பின்னுமாக அசை போடப்பட்டு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அக்னி சாட்சி சரிதாவும் பொசஸ்ஸிவ் நேச்சர் கேரக்டர்தான்.

சங்கீதம், இங்கீதம், நளினம் ஆகியவற்றின் மொத்த உருவமாக சிந்து பைரவியில் சிந்துவாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார் சுஹாசினி. பளீர் சிரிப்பும், பளிச் பேச்சும், சிவகுமாருடன் செய்யும் தர்க்கங்களும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவை. ‘இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ, நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ’ என்ற வரிகள் கல் நெஞ்சையும் கலங்க வைத்துவிடும்.

பெண்ணின் மனம் அடையும் பரவச உணர்வுகளை... சோகங்கள்... கோபங்கள்... எல்லாம் அந்த கதாபாத்திரங்கள் பாடும் பாடல்களில் பீறிட்டுக் கிளம்பும். காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (அவர்கள்), ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் (அபூர்வ ராகங்கள்), அழகான இளமங்கை கட்டில் கொடுத்தாள் (தப்புத் தாளங்கள்), கண்ணான கண்மணியே கண்ணுறங்கு சூரியனே (தண்ணீர் தண்ணீர்), ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்), பாடறியேன் (சிந்து பைரவி) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சந்தர்ப்பச் சூழலினால் வீட்டு விளக்கு, வீதி விளக்கான சமுதாயத்தின் விதிவிலக்குகளையும் இவர் சொல்லத் தவறவில்லை. அரங்கேற்றமும், தப்புத் தாளங்களும் விலைமகளிரைப் பற்றிய கதைகள்தானென்றாலும் வேறு வேறு தளங்களில் நடந்தவை.

கே.பி வடித்த பெண் சுதாபாத்திரங்களிலேயே தவறான பத்திரம் கல்கிதான். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் துரோகம் செய்த கணவனை பழிவாங்க கல்கி எடுத்த முடிவு விபரீதமானது. அவள் ஒரு தொடர்கதை கவிதா காய்ந்த பால் என்றால் கல்கி கசந்துபோன தீய்ந்த பால்.

இந்த பாத்திங்களை எல்லாம்விட வெகு இயல்பாக அவர் சிருஷ்டித்த அருமையான பாத்திரப் படைப்பு வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவிதான். தமிழில் ஸ்ரீதேவி மிக சிறப்பாக நடித்த படங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, ஜானி மற்றும் மூன்றாம் பிறை. இதில் வறுமையின் நிறம் சிவப்பில் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் கஷ்ட, நஷ்டங்களை, துயரங்களை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொள்ளும் வெகு இயல்பான பாத்திரம்.

இப்படியாக திரையில் கே.பி. வடித்த பெண் கதாபாத்திரங்கள் மற்ற படங்களில் வரும் ஹீரோயின்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறார்கள். ‘சில வேளைகளில் இந்த பாத்திரங்கள் முன்னுக்குப் பின் முரணாக தவறான முடிவுகளை எடுப்பது ஏன்?’ என்று அவரை ஒருமுறை கேட்டபோது, ‘பெண் மனம் அப்படித்தான்’ என்கிறார்.

பெண்களின் உள் மன ஆசை அபிலாஷைகளை அவர்களின் வித்தியாசமான, துணிச்சலான, சிந்தனைகளை இவர் அளவுக்கு தமிழில் வேறு எந்த இயக்குநரும் சொல்லவில்லை. இவர் படைத்த பெண் கதாபாத்திரங்கள் மிகையானவையா? சரியானவையா? என்றால், இவரது நினைத்தாலே இனிக்கும் சோனா (ஜெயப்ரதா)வைப் போல் தலையை பக்கவாட்டில் இரண்டு முறை அசைத்துவிட்டு, பிறகு மேலும் கீழுமாக ஆட்ட வேண்டியதுதான்.

ஏனென்றால் கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள் தமிழ்ச் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!

எஸ்.கதிரேசன்
vikatan

0 comments :

Post a Comment

 
Toggle Footer