Wednesday, December 31, 2014

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 33 வயதான டோனி 2004ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற டோனி, பல சாதனைகளை ஏற்படுத்தினார்.

இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவிய விக்கெட் கீப்பர் பிரச்சனையையும் தீர்த்து வைத்தவர்.

2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார். 2007ம் ஆண்டில் ஒரு நாள் போட்டி அணித்தலைவர் பதவியையும், 2008ம் ஆண்டு டெஸ்ட் அணித்தலைவர் பதவியையும் கைப்பற்றினார்.

இவரது தலைமையில் தான் இந்திய அணி ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை (2009ம் ஆண்டில்) பிடித்து வரலாறு படைத்தது.

‘கூல் கேப்டன்’ என்று அழைக்கப்படும் டோனி டெஸ்டில் செய்துள்ள சாதனை விவரங்களை பார்க்கலாம்.

* டெஸ்டில் அதிகமுறை (60) இந்திய அணியின் தலைவராக இருந்தவர். இவருக்கு அடுத்த இடத்தில் சவுரவ் கங்குலி (49 டெஸ்ட்) உள்ளார்.

* டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய அணித்தலைவர் டோனி (27 வெற்றி) தான். அடுத்த நிலையில் உள்ள கங்குலியின் தலைமையில் 21 வெற்றிகளை பெற்றுள்ளது.

* இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே அதிக வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தவர் (294 ). இந்த வகையில் 2வது இடத்தில் சயத் கிர்மானி 198 பேரை அவுட் ஆக்கி இருக்கிறார்.

* இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 224 ஓட்டங்கள் விளாசினார்.

* இந்திய அணித்தலைவர்களில் அதிக ஓட்டங்கள் (3454 ஓட்டங்கள்) குவித்தவர். 2வது இடத்தில் சுனில் கவாஸ்கர் (3449 ஓட்டங்கள்) உள்ளார்.

* டெஸ்டில் 7வது வரிசையில் இறங்கி டோனி எடுத்துள்ள ஓட்டங்கள் 2871. இந்த வரிசையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்தியர் இவர் தான். 2வது இடத்தில் கபில்தேவ் (2861 ஓட்டங்கள்) வகிக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer