Sunday, November 30, 2014

முதல் டெஸ்ட் போட்டியில் டோனி விளையாடினால், அணித்தலைவராக களமிறங்க காத்திருக்கும் கோஹ்லியின் வாய்ப்பு பறிபோகும்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 4ந் திகதி பிரிஸ் பேனில் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியின் போது பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு 3ம் திகதி நடக்கிறது.

இதை தொடர்ந்து இந்தியா–அவுஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போட்டி எப்போது நடைபெறும் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

முதல் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டதால் இந்திய அணித்தலைவர் டோனி 4 டெஸ்ட் போட்டியிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 2வது டெஸ்டில் இருந்து அணியில் இணைந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரிஸ்பேன் டெஸ்டை டிசம்பர் 19–23ம் திகதி நடத்தினால் டோனி தொடர் முழுவதும் ஆட வாய்ப்பு உள்ளது. இது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்து இருக்கிறது.

டோனி 4 டெஸ்டிலும் விளையாடினால் விராட் கோஹ்லி முதல் முறையாக டெஸ்டில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு பறிபோகும்.

இதேபோல விர்த்திமான் சகாவுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். அவர் பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி 5ம் திகதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஆர்.என்.பாபா தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer