Thursday, November 27, 2014

அஞ்சலி செலுத்துதல் அல்லது நினைவு கூருதல் என்பது மரணித்துவிட்ட மனிதர்களின் நினைவுகளையும், ஆற்றல்களையும், சாதனைகளையும் மீட்டிப்பார்ப்பதற்கும், அவர்கள் எங்களில் செலுத்திய தாக்கத்தின் அளவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குமான வழி. இந்த வழி மரணித்துவிட்டவர்கள் மீது நாங்கள் வைத்திருக்கிற அன்பினால் எமக்கு ஏற்பட்டிருக்கிற வலியைக் குறைக்கவும் அதிக நேரங்களில் உதவுகிறது. அதாவது மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம். இதுதான், உலகம் பூராவும் மனிதன் மரணித்துவிட்ட மனிதர்களுக்காக செய்வது. ஆக, அஞ்சலி செலுத்துவதோ, நினைவு கூருவதோ மனித மரபில் தொன்றுதொட்டு வருவதுதான். இது அடிப்படை பண்பாடாகவும் கொள்ளப்படுகிறது.

‘மகாவம்சம்’ என்கிற சிறிலங்காவின் குறிப்பாக சிங்கள வரலாற்றைக்கூறும் நூல் சொல்கிறது, ‘அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு அப்போதைய ஈழத்தின் பெரும்நிலப்பரப்பை ஆட்சி செய்த எல்லாளன் (கி.மு 145- கி.மு 101) என்கிற அரசனை அவனுடைய எழுபது வயதுகளில், தென்ஈழத்திலிருந்து புறப்பட்டு வந்த துட்டகாமினி (தமிழில் துட்டகைமுனு) என்கிற இளவரசன் நேரடி சண்டையில் தோற்கடித்தான்’ என்று. (நேரடிச் சண்டை என்று இங்கு குறிப்பிடப்படுவது எல்லாளனும், துட்டகாமினியும் ‘மட்டும்’ ஒருவரோடு ஒருவர் மோதியது பற்றியது.) எல்லாளன் தோற்கடிக்கப்பட்டாலும்; அவனுடைய நீதி தவறாத ஆட்சியையும், வீரத்தையும் மதித்து அனுராதபுரத்தில் எல்லாளனுக்கு துட்டகாமினி சிலை எழுப்பி மரியாதை செய்தான் என்று மேலும் சொல்கிறது மகாவம்சம். தற்போதைய சிறிலங்காவின் (தமிழில் இலங்கை) பெரும்பான்மை மக்கள் துட்டகாமினியை இன்னும் வரலாற்று நாயகனாகவும், வீரத்தின் மறு உருவமாகவும் மதித்து கொண்டாடுகிறார்கள். மகாவம்சத்தில் போதிக்கப்படுகின்ற ‘போர் தர்மங்கள்(?)’ குறித்து எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் மரணித்துவிட்ட வீரனை மதிப்பது தொடர்பில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.

இன நல்லிணக்கம்

இன நல்லிணக்கம், அர்த்தம் அறியாமலேயே அநேகர் உச்சரிக்கின்ற வார்த்தைகளில் தற்போது முக்கியமானது. சில காலத்துக்கு முன்னர் ‘போர் நிறுத்தம்’ என்கிற சொல்லும், அதற்கு முன்னரான காலத்தில் ‘சமாதானம்’ என்கிற சொல்லும் கூட அர்த்தமே அறியப்படாமல் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள். அவற்றை ஐக்கிய நாடுகளிலிருந்து, உலக சமாதான விரும்பிகள்(?), இலங்கை அரசாங்கம், தமிழ் போராட்ட குழுக்கள், அரசியற்கட்சிகள், ஊடகங்கள் என்று முன்பள்ளி மாணவர்களைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே பாவித்திருக்கிறார்கள். அப்படியானதொரு நிலையிலேயே இன்றைக்கு இனநல்லிணக்கம் தொடர்பான வார்த்தைப் பிரயோகம் முன்னிலையில் வகிக்கிறது.

மக்களின் மனங்களை வெல்வதென்பது எங்குமே இலகுவானதல்ல. அதுவும், நாடுகளின் அரசாங்கங்களுக்கோ- ஆட்சியாளர்களுக்கோ அது இலகுவாக இருந்துவிடுவதில்லை. அப்படியிருக்கிற நிலையில், இலங்கை அரசாங்கத்தினாலோ, ஜனாதிபதியாலோ ‘உரிமைகள் மறுக்கப்பட்ட இனமாக அறுபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் உணர்ந்து வைத்திருக்கிற சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வது’ சில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ, வருடங்களிலேயோ சாத்தியமாகி விடாது.

வடக்கு - கிழக்கிலுள்ள மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ‘சுயாட்சிக்கான ஆயுதப் போராட்டத்தில்’ ஆயிரக்கணக்கான உறவுகளை இழந்திருக்கிறார்கள். அது, விடுதலைப் புலிகள் அமைப்பில் பெருமெடுப்பில் நிகழ்ந்திருக்கிறது. அதுதவிரவும், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்த எல்லா தமிழ் குழுக்களிலும் போராளிகள் இலங்கை அரசுக்கு எதிராக போராடி(யும், தமக்குள் ‘தக்கன பிழைத்தல்’ விதியினை முன்னிறுத்தியும்) மரணித்திருக்கிறார்கள். இது, உரிமைகளுக்காக போராடுகின்ற எல்லா சமூகத்துக்குள்ளும் இருப்பது.

அப்படி போராடி மரணித்துவிட்டவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையானது. அதற்கென்று அந்த போராட்ட குழுக்களோ - மக்களோ குறித்த ஒரு தினத்தை முன்னிறுத்தி செயற்படுவதுமுண்டு. அப்படியான சில நாட்கள் வடக்கு - கிழக்கிலும் உண்டு. அதற்கு ஒவ்வொரு போராட்ட குழுவும் - இயங்கங்களும் ‘வீரமக்கள் தினம்’, ‘மாவீரர் தினம்’ என்கிற தங்களது அடையாளத்துடனான பெயர்களை சூட்டி அனுஷ்டிக்கின்றன. அப்படியானதொரு தினமே ‘நவம்பர் 27’.

எவ்வளவு தவிர்க்க நினைத்தாலும் கடந்த கால்நூற்றாண்டு காலமாக வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகளவானவர்கள் உணர்வு பூர்வமாக உணருகின்ற நாள் அந்த ‘நவம்பர் 27’. தனி ஈழம் கோரி போராடி மாண்ட விடுதலைப் புலிப் போராளிகளை நினைத்து அந்த இயக்கமும், உறவினர்களும், மக்களும் அஞ்சலி செலுத்தும் நாள். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்கிற சொற்பிரயோகத்துக்குள் முன்னிறுத்தினாலும், வடக்கு- கிழக்கிலிருக்கிற மக்களுக்கு அந்த இயக்கத்தில் போரடியவர்கள் ஒன்றில் மகனாக - மகளாக, சகோதரனாக - சகோதரியாக, நண்பனாக- நண்பியாக இருந்தவர்கள். அப்படியிருக்கிற நிலையில் இழந்து போய்விட்ட உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்துவது இயல்பானது. கடமையானதும் கூட.

2009 மே 17ல் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களை கடந்து விட்ட போதிலும் அதற்குப் பின்னரான ஒவ்வொரு நவம்பர் மாதமும் கூட வடக்கு- கிழக்கு மக்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பற்ற உணர்வையே வழங்கி வருகிறது. அது, எங்கிருந்து ஆரம்பிக்கிறது. மகாவம்சம் போதிக்கின்ற அதாவது துட்டகாமினி எல்லாளனுக்கு செய்த மரியாதையை இன்றுள்ளவர்கள் முன்னிறுத்தாமையினாலும் உருவானது. மேடைகளிலும், அறிக்கைகளிலும் ‘இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி செயற்படுகிறோம்’ என்று சொல்லிக் கொள்கிற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ‘நடைமுறையில் சிறுபான்மை மக்களின் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்ச்சியை விதைப்பது’ எப்படி நல்லிணக்கத்தை முன்னெடுப்பதாக அமையும். முதலில் மக்களின் மனங்களின் சின்ன நம்பிக்கையை விதைக்கட்டும். அப்புறமாக இன நல்லிணக்கம் பற்றி பேசலாம் என்ற நிலைப்பட்டிலேயே மக்களில் அநேகர் இருக்கின்றனர். மக்களின் மன உணர்வுகளுக்கு - அவர்கள் செலுத்த நினைக்கிற அஞ்சலிகளுக்கு இடம் கொடுங்கள்…!

யாழ் பல்கலைக்கழகம்

* யாழ்.பல்கலைக்கழகவிடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்.

* யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின தீபம்.

* யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடி?.

* அனுமதியின்றி பேரணி செல்ல முயன்றவர்களே கலைப்பு: பொலிஸ்.

* யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு.

* தமிழ் இளைஞர்களை கடந்த காலத்துக்கு அழைக்கிறதா அரசாங்கம்: மனோ.

நவம்பர் 27, 2012 அன்று யாழ் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதியின்றி இராணுவம் நுழைந்த பின்னரான நாட்களில் ஒரு செய்தித்தளமொன்றில் இவ்வாறான தலைப்புக்களைக் காண முடித்தது. இந்த செய்தித் தலைப்புக்களின் தொடர்ச்சி இந்த கட்டுரை எழுதப்படும் வரை வந்து கொண்டேயிருந்தது. கடந்த வருடமும் மாவீரர் தின காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பதற்ற நிலையொன்று இருந்தது. இந்த பதற்ற நிலையை இலங்கை அரசாங்கம் தேவையற்று தோற்றுவிப்பதாகவே படுகின்றது.

மாணவர்கள் எல்லா இடங்களிலும் உணர்வுகளுக்கும்- போராட்டத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள். அதுவும், 1980களுக்குப் பின்னர் வடக்கு- கிழக்கில் பிறந்தவர்கள் அதிகம் படிக்கின்ற யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு என்பது நிர்வாக ரீதியில் தடுக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களின் உணர்வு ரீதியில் தடுக்க முடியாதது. அது, அவ்வளவு யதார்த்தமாகவும் இருக்க முடியாது. இப்படியானதொரு பதற்ற நிலை இன்னுமின்னும் தனி ஈழ கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதப் போராட்டங்கள் தோற்றம் பெற்ற முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கே கொண்டு செல்லும். அப்படியானதொரு நிலை இங்கு யாருக்குமே நல்லது கிடையாது. வேணுமென்றால் ஆயுத தரகர்களுக்கும்- உலக வல்லாதிக்க வாதிகளுக்கும் நன்மை பயக்கலாம்.

இறுதியாக வடக்கு - கிழக்கு மாணவ உறவுகளுக்கு, நொடிந்து போயிருக்கிற பிராந்தியத்தின் எதிர்கால சொத்துக்கள் நீங்கள். மீள் கட்டியெழுப்புதலும், அபிவிருத்தியும் உங்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ அதை செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அப்படியொனதொரு நிலையில் உங்களைச் சுற்றி தோற்றுவிக்கப்படும் பதற்ற நிலைகளை கவனமாக கையாண்டு அடுத்த கட்டத்துக்கான பாய்சல் குறித்து சிந்திப்பதில் அக்கறை கொள்ளுங்கள். அதைத் தவிர்த்து அதிகப்படியான உணர்வுகளுக்குள் சென்று பிரச்சினையின் அளவை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், பலருக்கு எங்களை குறிப்பாக மாணவர்களைச் சுற்றி பதற்றமான சூழ்நிலையை வைத்துக் கொண்டிருப்பது தேவையாக இருக்கிறது. அது சிலரின் சுய தேவைகளை மட்டுமே தீர்க்க உதவும். மற்றப்படி எங்கள் சமூக முன்னேற்றத்தையோ, உரிமைகளையோ பெற்றுத்தராது. சுதாகரித்துக் கொள்வது மிகவும் அவசரமானது. அதுபோல அவசியமானது!

(மீள்பதிவான இந்தப்பகுதி, புருஜோத்தமன் தங்கமயில் எழுதிய ‘எமது அரசியல் எமது உரிமை’ பத்தி தொடரின் 3வது பகுதியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினக்குரல் பத்திரிகையிலும், எமது இணையத்தில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைகளே இன்னமும் தொடரும் நிலையில் மீள்பிரசுரிக்கின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

0 comments :

Post a Comment

 
Toggle Footer