Friday, October 31, 2014

பணத்திற்காக விளையாடும் போட்டிகளுக்கு முக்கியதுவம் கொடுப்பதாக டென்னிஸ் வீரர்கள் பெயஸ், சோம்தேவ் உள்ளிட்ட வீரர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் சாடியுள்ளது.

சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா, சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் விளையாடவில்லை.

மேலும் தரவரிசையில் சறுக்கலை சந்தித்து வருவதால், ஏ.டி.பி. சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக கூறி ஆசிய விளையாட்டில் இருந்து விலகி விட்டனர்.

இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சங்கங்களுக்குட்பட்ட ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும், இந்திய அணிக்காக பங்கேற்க மத்திய அமைச்சகம் அழைத்தால், எந்தவித ஆட்சேனையும் இன்றி விளையாட எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

சில சீனியர் மற்றும் தரவரிசையில் உள்ள வீரர்கள் ஆசிய விளையாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், பரிசுத்தொகைகளை வழங்கும் போட்டித் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆசிய விளையாட்டில் இருந்து விலகி இருப்பது தெரிய வந்தது.

இது போன்று 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கவுரவமிக்க போட்டிகளில் அதிகமான பதக்கங்களை பெறுகிற போது அது தான் நாட்டிற்கு பெருமையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற முக்கியமான போட்டிகளை புறக்கணிக்கும் வீரர்களுக்கு அரசின் நிதி உதவி தொடராது என்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே டென்னிஸ் வீரர்களின் நிலைப்பாட்டை விளையாட்டு அமைச்சகம் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி இந்திய டென்னிஸ் சங்கம் கூறுகையில், போதுமான தரவரிசை புள்ளிகள் இல்லாவிட்டால் நாட்டின் சார்பில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியாது. டேவிஸ் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகளில் உரிய தரவரிசையுடன் ஆட முடியாது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தரவரிசையை தக்க வைப்பதற்காக ஆசிய போட்டியை தவிர்த்து சேலஞ்சர்ஸ் மற்றும் ஏ.டி.பி. போட்டிகளில் விளையாடுவதால், இவர்கள் நிறைய ஊக்கத்தொகையைத் தான் இழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer