Thursday, July 31, 2014

20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது. நிமிட முள் தாண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடியாய் விழுந்தது அந்த ஒலி. மணி பிற்பகல் 2 ஐ தாண்டியிருந்தது. பித்துப்பிடித்தவளாய் தன்னிடம் மகள் ஓடிவருவதைக் கண்ட தாய் மேலும் பதறிப்போனாள். கூந்தல் கலைந்து பதற்றமான முகத்துடன் கதறியழுதுகொண்டு மகள் ஓடிவந்ததைப் பார்த்த தாயின் உள்ளம் மணலில் விழுந்த புழுவாய் துடித்தது. ஏன் தாமதமாகினாய் என்ற கேள்விக்கு மகளிடமிருந்து கிடைத்த பதில், ஆயிரம் அசுரபலமுள்ள யானைகள் இதயத்தில் மிதிப்பது போன்ற வலியை அந்தத் தாய்க்கு உண்டாக்கியது.

ஆம்! அந்தச் சிறுமி மனித மிருகமொன்றின் காமப் பசிக்கு இறையாகியிருக்கின்றாள். டெல்வின் என்ற பெயரால் அழைக்கப்படும் சின்னத் தோட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டெல்வின் பி பிரிவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் வாசுகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினாறு வயதான வாசுகியின் தந்தை தோட்டத்தில் சில நாட்களும் ஏனைய நாட்களில் இறக்குவானை சந்தையில் கூலித்தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இல்லத்தரசியாய் குடும்பத்தை நிர்வகிக்கும் தாய், சில காலமாக தோட்டத்தில் வேலை செய்தவள். ஐந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். கடைக்குட்டிதான் வாசுகி. ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள்.

அன்று 20 ஆம் திகதி நரக வேதனையை அனுபவிக்கப் போவதை அறியாத வாசுகி டெல்வின் ஏ பிரிவுக்கு தனது உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் இந்த அவலம் நடந்திருக்கிறது.

சஞ்சலமற்ற பிஞ்சுக் குழந்தைபோல நடந்து வந்த வாசுகியை துணியொன்றினால் முகத்தை மூடி பாழடைந்த குடிலொன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளான் ஒரு காமுகன்.

அங்கு நேர்ந்த அவலத்தை தன் தாயிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் வாசுகி. இச்சம்பவம் காட்டுத் தீ போல இறக்குவானை எங்கும் பரவியது. பாதிக்கப்பட்ட சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மலைக் குன்றுகள் சூழ எப்போதுமே மேகக் கூட்டம் நிறைந்து இயற்கை அன்னையின் நெற்றித் திலகமோ என எண்ணத் தோன்றும் இறக்குவானை சோகத்தில் மூழ்கியது.

உடனடியாக பெற்றோர் இறக்குவானை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் வாசுகியின் வீட்டுக்கு வருகை தந்து விசாரித் துள்ளனர். எனினும் அவர்கள் சந்தேக நபரை கைது செய்யவில்லை. சந்தேக நபர் அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்துக்கும் மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யக் கோரியும் 21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இறக்குவானையை அண்டிய தோட்டப்பகுதிகள் அனைத்தும் முடங்கின.

தெனியாய, பலாங்கொடை, இரத்தினபுரி தோட்டப்பகுதி மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சுமார் ஆயிரக்கணக்கானோர் இறக்குவானை நகரில் கூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக பொலிஸார் இரகசியமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அங்கு தகவல் பரவியதால் மேலும் பதற்றம் அதிகரித்தது.

பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குற்றம் சுமத்தினர். சந்தேக நபரை 24 மணிநேரத்துக்குள் கைது செய்வதாக இறக்குவானை பொலிஸார் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை கைது செய்யக்கோரி மலையகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து மறுநாளும் இறக்குவானையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபர் சரணடைந்துள்ளதாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இத்தகவலை நம்பமுடியாவிட்டால் தன்னுடன் குறுவிட்ட சிறைச்சாலைக்கு பத்துப்பேர் வருமாறு ரஞ்சித் சொய்ஸா அழைப்பு விடுத்தார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சந்தேக நபரான மொஹமட் அர்ஷாட் (27) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer