Saturday, July 26, 2014

மதம் என்பது ஒரு மனிதனை வழிநடத்தவே தோற்றுவிக்கப்பட்டது. இரண்டு வெவ்வேறு மதத்தையும் சமூகத்தையும் பற்றிய உணர்வுகளை அழகாக ரசிக்கிற விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது ‘திருமணம் எனும் நிக்காஹ்’. இரண்டு இதயங்கள் சேர்வதற்கு மதம் எப்படி தடையாய் இருக்கிறது என்பதையும் காட்சிகளில் எளிமையாய் புரிய வைத்துள்ளார் அறிமுக இயக்குனர் அனிஸ்.

ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள் ஜெய்யும் நஸ்ரியாவும். டிக்கெட் கிடைக்காததால் ஜெய் ‘அபுபக்கர்’ என்ற இஸ்லாமிய பெயரில் பயணம் செய்கிறார், தன் தோழியின் புராஜெக்ட் வேலைக்காக செல்லும் நஸ்ரியா தன் தோழியின் பெயரான ‘ஆயிஷா’ என்ற பெயரில் பயணம் செய்கிறார். இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். தங்களை இஸ்லாமியர்களாக அறிமுகம் செய்துகொண்டாலும் இருவருமே பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள்.

ஏதோ ஒரு விதத்தில் ஒருவரை ஒருவர் கவர்ந்துவிட, இவர்களுக்குள் காதல் உதயமாகிறது. ஜெய்யை இஸ்லாமியர் என்று நினைக்கும் நஸ்ரியா, தன் இஸ்லாமிய தோழியிடம் அவர்கள் மதத்தின் வழக்கங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். நஸ்ரியாவை இஸ்லாமியர் என நினைக்கும் ஜெய், இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் பல முயற்சிகளை எடுக்கிறார். ஜெய்யை சந்திக்க வரும் நஸ்ரியா, படுதா அணிந்து வருவதும், ஜெய் நஸ்ரியாவிடம் ‘சலாம் அலேகும்’ சொல்வதும் வேடிக்கையான விஷயங்களாக தொடர்கிறது. இப்படி திகட்ட திகட்ட பிரியாணியின் ருசியைக் காட்சிக்கு காட்சி உணரவைத்தாலும், ஒரு கட்டத்தில் இருவருமே தயிர் சாதம் தான் என்கிற உண்மை அம்பலமாகிறது இருவருக்கும்!

அவாள் இவாளோடு இணைவதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது. கல்யாண வேலைகள் பேஷாக நடந்துகொண்டிருக்க, நான் காதலித்த ஆயிஷா நீயில்லை என ஜெய்யும், நான் காதலித்த அபுபக்கர் நீயில்லை என நஸ்ரியாவும் உணர, இந்த திருமணம் தேவையில்லை என்ற நியாயமான முடிவை எடுக்கிறார்கள். இதற்கிடையில் ஜெய்யை ஒரு வில்லன் கும்பல் துரத்திக்கொண்டு வர... பிரிந்த காதல் மீண்டும் இணைந்ததா? என்பது சுவாரஸ்யமான மீதி கதை!

பூனூல் போட்ட அம்பியாக ‘விஜய ராகவன் சாரி’ கதாபாத்திரத்திலும், மை வைத்த கண்களோடு குல்லா போட்ட ‘அபுபக்கர்’ கதாபாத்திரத்திலும் கச்சிதமாய் பொருந்துகிறார் ஜெய். அதே விதத்தில், பிரியாணியை அருகில் கொண்டுவந்ததும் ‘சீச் சீ...’ என சொல்லும் அயர் ஆத்து பெண்ணாகவும், படுதா அணிந்து பரவசத்தோடு வரும் இஸ்லாமிய பெண்ணாகவும் அசத்தி உள்ளார் நஸ்ரியா. க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெய்யை விலாசும் அறிமுக வில்லன் தினேஷ் நினைவில் நிற்கிறார், அவருக்கு மேலும் வாய்ப்புகள் வருவதற்கு வாழ்த்துகள்!

40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜெய், ‘இதோ பத்து நிமிடத்தில் வருகிறேன்’ என்று சொல்லி நஸ்ரியாவை பலமணி நேரம் காக்க வைப்பது, இந்த பசங்களே இப்படித்தான் என சொல்லும் அளவிற்கு கலகலப்பான காட்சி. பிரியாணியை ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவது ரசிக்க வைக்கிறது.

காரணமே இல்லாமல் வில்லன் தினேஷ் ஜெய் மேல் ஆத்திரப்படுவதும், எந்தவித விசாரணைகளும் இல்லாமல் ஜெய்யை துவைத்து எடுப்பதும் தலைசுற்றும் குழப்பங்கள். இஸ்லாம் மதத்தைப் பற்றிய விளக்கங்களை சொல்லும்போது நம்மையும் அறியாமல் இஸ்லாத்தின் மீது ஒரு நேசம் ஏற்படுவது உண்மை. இயக்குனர் இஸ்லாமியர் என்பதால் அதற்கான அடையாளங்கள் படத்தில் ஏராளம்.

பாடல்கள் அத்தனையும் ‘ஏ’ க்ளாஸ்! ஒவ்வொரு பாடலிலும் இசைத்துளிகளால் இதயத்தை நனைத்து பரவசப்படுத்துகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ‘என் தாரா... என் தாரா...’ பாடல் வரிகள் காதலர்களை சிறகடிக்கச் செய்யும் சுகமான வரிகள்.

என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் காட்சி வரை சுவாரஸ்யத்தை தூண்ட, திடீரென படத்தை முடித்துவிடுவது... பிரியாணி விருந்து எதிர்ப்பார்த்து வந்த கல்யாண வீட்டில் வெஜிடேரியன் சாப்பாடு தான் என்பது போல ஏமாற்றத்தையே கொடுக்கிறது. இருந்தாலும் படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் தாராளமாய் கொட்டிக் கிடக்கிறது.

திருமணம் எனும் நிக்காஹ் - வெஜிடேரியன் விருந்து!

0 comments :

Post a Comment

 
Toggle Footer