Wednesday, July 30, 2014

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

  ’’கும்பகோணம் தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் பலியான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தி னரையும் பொதுமக்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆட்படுத்தியுள்ளது.

 குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் மட்டுமே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 11 பேர் குறைந்தபட்ச தண்டனை எதுவுமின்றி, நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையானவர்களில் எட்டுப் பேர் அதிகாரிகள், மூன்று பேர் ஆசிரியர்கள்.  தண்டிக்கப் பட்டவர்களில் பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி மற்றும் அவருடைய துணைவியார், சத்துணவு அமைப்பாளர், சமையல்காரர் என ஐந்து பேர்.  மற்ற ஐந்து பேரும் அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய, கடமை தவறிய அதிகாரிகள் அல்லர்.  சத்துணவு அமைப்பாளர், சமையல்காரர், பொறியாளர், அலுவலக உதவியாளர், நேர்முக உதவியாளர் போன்ற சாதாரணமான, அதிகாரம் எதுவுமே இல்லாத பணியாளர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த வியப்பையும் வேதனையையும் அளிக்கிறது.

தனியார் பள்ளி நடத்துவதற்கு அரசு வரையறுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யாமல், அந்தப் பள்ளிக்கு நேரிலே சென்று பார்வையிடாமல், உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.  இதற்கு சத்துணவு அமைப்பாளர், சமையல்காரர் போன்றவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்?

சட்ட விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி வழங்கியவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தமது கடமையை முறையாக, நேர்மையாக செய்யத் தவறியவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதோடு, நீதித் துறையின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் நன்மதிப்பைச் சீர்குலைப்பதாகவும் உள்ளது. எனவே, கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு கல்வி நிறுவனங்களே பல இடங்களில் பாழடைந்த கட்டிடங்களில் இன்னும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்காத நிலை உள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலையை அறியவும், அவற்றைச் சீர்படுத்தி மேம்படுத்தவும் ஏதுவாக தனி விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டுமென்றும் இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.’’

0 comments :

Post a Comment

 
Toggle Footer