Sunday, July 27, 2014

கடந்த 18 தினங்களாக இஸ்ரேல் - காஸா முனையில் இடம்பெற்று வந்த உக்கிர  தாக்குதல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐ.நா. சபை விடுத்த கோரிக்கையை ஏற்று இஸ்ரேல், காஸா முனை இடையே 12 மணி நேர போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததுள்ளது.

இஸ்ரேல் இளைஞர்கள் மூவர் கடத்தி கொல்லப்பட்டதாலும், பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாலும், இஸ்ரேல்–காஸாமுனை இடையே நீறு பூத்த நெருப்பாக இருந்த விரோதம், போராக உருவெடுத்தது.

இஸ்ரேல் மீது காஸா முனை பகுதியை ஆட்சி செய்துவரும் ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் வீச்சு நடத்துகின்றனர்.

காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி, கடல்வழி தாக்குதல்கள் நடத்துகின்றனர். கடந்த 19 நாளாக நடந்து வருகிற இந்த போரில், அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது சர்வதேச நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மனித நேய அடிப்படையில் இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபையும், அமெரிக்காவும் வலியுறுத்தின. இதை இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 12 மணி நேர தற்காலிக சண்டை நிறுத்தம் தற்போது அமுலில் உள்ளது.

போர் நிறுத்தம் அமலில் இருந்த 12 மணி நேரத்தில் காஸா பகுதியில் இருந்து 130-க்கும் மேற்பட்ட சடலங்களைஐ.நா.அதிகாரிகள் வெளியேற்றினர். இவற்றில் பெரும்பாலான சடலங்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி, சின்னாபின்னமாகி கிடந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்குள் மேலும் பல சடலங்கள் சிக்கியிருப்பதாகவும் அவற்றை அகற்ற உதவிடும் வகையில் போர் நிறுத்தத்தை மேலும் சில மணி நேரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் முன்னர் அறிவித்தது.

பின்னர், இன்று அதிகாலை ஒளிபரப்பான இஸ்ரேல் அரசின் தொலைக்காட்சி செய்தியின்படி மனிதநேய அடிப்படையில் இன்று (ஞாயிறு) இரவு வரை மேலும் 24 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

24 மணி நேரம் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும், அதே நேரத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வருகிற சுரங்கங்களை தேடுவது தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இதேபோன்று ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனைத்து பாலஸ்தீன பிரிவினரும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிப்பார்கள் என்றார்.

முன்னதாக காஸா முனையின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் 19 நாள் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 883 ஆக உயர்ந்தது. இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.

இதற்கிடேயே இஸ்ரேல்–ஹமாஸ் இயக்கத்தினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. பாரீஸ் நகரில் நேற்று பிரான்ஸ் ஏற்பாட்டின் பேரில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பிய யூனியன், துருக்கி, கத்தார் நாடுகளின் அதிகாரிகள் கூடிப்பேசினர்.

சண்டை நிறுத்தம் நிரந்தர முடிவுக்கு வரவேண்டுமானால் காஸா முனையில் இருந்து இஸ்ரேல்–எகிப்து முற்றுகை முடிவுக்கு வரவேண்டும் என்று ஹமாஸ் இயக்கத்தினர் வலியுறுத்துகின்றனர். இதேபோன்று ஹமாஸ் இயக்கத்தினரின் எல்லை தாண்டிய சுரங்கங்களை முடிவுக்கு கொண்டு வந்தால்தான் நிரந்தர போர் நிறுத்தம் என இஸ்ரேல் கூறுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer