Thursday, May 29, 2014

உலகில் எந்த ஒரு நாடும் கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உடல் நல அளவு மற்றும் மதிப்பிடுதல் துறையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முரே, 1980ல் இருந்து 2013 வரை தனது சகாக்களுடன் 188 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் 1700 சோதனை முடிவுகளுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் பருமன் என்ற தீவிர நிலையைத் தடுக்க எந்த நாட்டாலும் இயலவில்லை என்றும், இது மிகவும் சவாலான பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போது 2 பில்லியன் மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.

இதில் அதிக அளவு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளதாகவும், அங்கு 60 முதல் 65 சதவீத பெண்கள் அதிக உடல் எடையால் சிரமப்படுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

உலகில் உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் தொகையில், அமெரிக்காவில் மட்டும் 13 சதவீதத்தினர் உள்ளதாகவும், இது உலகிலேயே மிக அதிகம் என்றும் தெரிகிறது.

இந்தியாவும், சீனாவும் சேர்ந்து இந்த வகையில் 15% அளவுக்கு உடல்பருமன் உள்ளவர்களைக் கொண்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

முரே தரும் தகவலின்படி, வருமானத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளதாம். பணக்காரத் தன்மை கொண்டவர்களின் வயிறும் பெரிதாகிவிடுகிறதாம்.

உடல் எடை அதிகம் இருந்தால், அதனுடன் நீரிழிவும், புற்றுநோயும் (குறிப்பாக கணையப் புற்று) கைகோர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இப்போது அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer