Saturday, May 31, 2014

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபயர் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கொல்கத்தாவுடன் இறுதிப் போட்டியில் மோதப் போகும் அணி என்பதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும் போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் இரு அணிகளுக்குமே பாதகமான மைதானமாகும். இரு அணிகளும் அதிகமுறை தோல்வியைத் தான் சந்தித்துள்ளன.

ஐபிஎல் முதல் சுற்றுப் போட்டிகளின் போது இரு முறையும் பஞ்சாப் அணியுடன் தோல்வியைத் தழுவியிருந்தது சென்னை. இரு முறையும் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிளென் மெக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதனால் இம்முறை மெக்ஸ்வெல்லை ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்கச் செய்ய சென்னை பந்துவீச்சாளர்கள் குறிவைத்துள்ளனர். குறிப்பாக மெக்ஸ்வெல்லிற்கு தான் இம்முறை விக்கெட்டைச் சுற்றிவந்து பந்துவீசப் போவதாக அஷ்வின் கூறியுள்ளார்.

அஷ்வினின் 24 பந்துகளுக்கு மெக்ஸ்வெல் 64 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதனால் இன்றைய அரையிறுதிப் போட்டி மெக்ஸ்வெல் - அஷ்வின் இடையிலான நேரடிப் போட்டியாகவும் பார்க்க முடியும்.

எனினும் சென்னையுடன் விளாசிய மெக்ஸ்வெல், கடைசியாக நடந்த நான்கைந்து போட்டிகளில் சோபிக்கத் தவறியுள்ளதால் பஞ்சாப் அணி அவர் மீதான நம்பிக்கையை சிறிது இழந்துள்ளது.

சென்னையை பொருத்தவரை சென்னையின் துடுப்பாட்ட வரிசை பலமானதாக உள்ள போதும் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளப் பலமான பந்துவீச்சு இருந்திருக்கவில்லை. இதனால் தான் கடந்த இரு முறையும் சென்னைக்கு எதிராக பஞ்சாப் 200 ஓட்டங்களை கடந்தது.

மோசமான ஃபீல்டிங்கும், கேட்ச்சுக்களை கோட்டைவிட்டதுமே கடந்த சில தோல்விகளுக்கு காரணம் என தோனி தெரிவித்திருந்தார். இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணியாக சாதனை படைக்கும். பஞ்சாப் வெற்றி பெற்றால் முதன்முறை இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணியாக சாதனை படைக்கும்.

இரு அணிகளுமே ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் பலம்வாய்ந்த பந்துவீச்சு வீரர்களைக் கொன்டிருக்கின்றன. சென்னை அணி இதுவரை 85 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளது. பஞ்சாப் அணி 93 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளது.

சென்னை அணி சார்பில் பிராண்டன் மெக்குலம், டுவேய்ன் ஸ்மித் இருவரும் இணைந்து 12 இன்னிங்ஸில் 513 ஓட்டஙக்ளை விளாசியுள்ளனர். 42.75 சராசரியாகும்.

அதே போன்று டாவிட் மில்லர், கிளென் மெக்ஸ்வெல் இணைந்து 6 போட்டிகளில் 385 ஓட்டங்களை விளாசியுள்ளனர். சராசரி 64.16 ஆகும். இன்றைய போட்டியில் வெற்றி பெறப் போகும் அணி யார்? பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா சென்னை? அல்லது சென்னை வீழ்த்தி தனது முதல் கன்னி இறுதிப் போட்டியில் களமிறங்குமா பஞ்சாப்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer