Thursday, April 24, 2014

தனது முன்னேற்றத்துக்காக கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் என ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பிரசார குழு தலைவர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

விசாகபட்டினத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, மோடி ஒரு ஹிட்லர். அவர் தனது சுயநலத்துக்காக கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டினார். அவர் பிரதமரானால், தொழிலதிபர்கள் நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக்களுக்கு எந்த இடமும் இல்லை. அவருடன் சந்திரபாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்?

கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.வுடன் கூட்டு வைத்தது வரலாற்று பிழை என்றார். தற்போது பா.ஜ.வுடன் மீண்டு கூட்டணி சேர்ந்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடங்களை விற்றுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பணம் மூலம் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் வெறித்தனமாக இருக்கின்றனர்.

மேலும் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் 8வது இடத்தில் உள்ளது என்றும் காங்கிரசுக்கு வீழ்ச்சி என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் மக்களை திசை திருப்புவதற்காக சில கட்சிகள் செய்த ஏற்பாடு எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer