Saturday, April 26, 2014

ஜூன் மாதம் முதல் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் காதல் ஜோடிகள் இயக்குனர் விஜய்யும், அமலாபாலும் ஒருவரை ஒருவர் சிலாகித்து புகழ்ந்து பேசி வருகிறார்கள்.  திருமணம் குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் விஜய் ”இனி நான் தனி மனிதன் இல்லை.  என் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன். அழகான இதயம் கொண்ட அமலாபால் தான் என் வாழ்க்கைத் துணை. அமலாவை அதிகபட்ச அன்புடனும், அக்கறையுடனும் புதையலைப் போல பாதுகாப்பேன்.

எங்கள் திருமணம் குறித்த தகவலை மரியாதையுடன் அழைப்பிதழ் வைத்து தெரிவிக்க காத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே எப்படியோ அந்த தகவல் வெளியாகிவிட்டது வருத்தம் அளிக்கிறது. அமலா நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் முடிந்ததும், என் இதயத்திற்கு நெருக்கமான ’சைவம்’ திரைப்படம் முடிவடைந்ததும் தான் திருமண கொண்டாட்டத்தில் எங்களால் முழுவதுமாக ஈடுபட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

திருமணம் குறித்து அமலா பால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் நுழைய வேண்டிய சமயம் வந்துவிட்டது. என் வாழ்க்கைத்துணை என்னுடன் கைக்கோர்த்து, மீதமிருக்கும் வாழ்க்கையை என்னோடு கழிக்க என்னப்போலவே ஆர்வத்துடன் காத்திருக்கிறார். திருமணத்தைப் பற்றி நான் நினைத்துப்பார்த்தது கூட இல்லை. ஏன் அந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை. ஆனால் விஜய் என் வாழ்க்கையில் வந்ததும் எல்லாமே மாறிவிட்டது. ஏன் நானே மாறிவிட்டேன். அவர் என்னை மாற்றிவிட்டார்.

எனக்குள் இருந்த ஏதோ ஒன்று அந்த மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொண்டது. பிறகு தான் அது, நான் அவர் மீது வைத்திருக்கும் காதல் என்று உணர்ந்தேன். விஜய்யின் காதலில் மூழ்கி, அன்பில் நனைந்துவிட்டேன். என் வாழ்க்கையை அழகாக மாற்றியதற்கும், என் வாழ்க்கையை முழுமையடைய வைத்ததற்கும் விஜய்க்கு மிக்க நன்றி. ஆமாம் நீங்கள் என்னை முழுமையடையவைத்துவீட்டீர்கள்” என்று தனது காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer