Tuesday, April 29, 2014

காதலில் சொதப்புவது எப்படி என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். அந்த எதிர்பார்ப்புடன் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் தமிழில் அறிமுகமாகிறார் என்ற ஆவலும் படம் பார்க்க தூண்டுகிறது. மீண்டும் ஒரு வித்யாச அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

பேசிப் பேசித்தான் நாம் வாழ்வில் பல பிரச்சனைகளை சம்பாதித்துக் கொள்கிறோம், அதனால் பேசாமல் இருந்தால் நம் வாழ்வில் பல பிரச்சனைகள் சரியாகிவிடும், வாயைத் திறந்து பேசுவதைவிட இதயத்தால் பேசுவதே சுகமானது என்ற வித்தியாசமான கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறார். கான்செப்ட் என்னமோ நல்லாத்தான் இருக்கு ஆனா அதைத் தவிர படத்தில் ஒன்னுமே இல்லையே என்று தான் படம் பார்த்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சேல்ஸ் ரெப்-பாக வரும் கதாநாயகன், வருகிற வருமானத்தில் தன் செலவு போக மீதியை தான் வளர்ந்த ஆசிரமத்திற்கு கொடுத்துவிடுகிறார். அவர் வசிக்கும் பனிமலைப் பகுதியில் ‘டம் ஃப்ளு’ என்ற புதுவிதமான நோய் வருகிறது. இந்த நோய் வந்தவர்கள் பேச முடியாது. அதனால் பனிமலை வாழ் மக்கள் மருத்துவரிடம் பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த இடத்தில் தான் ஹீரோ ஹீரோயினை சந்திக்கிறார். ஆம், ஹீரோயின் ஒரு டாக்டர்!

தன் பேச்சாற்றலால் பலரையும் கவர்கிறவர் ஹீரோ, பேசுவதே பிடிக்காமல் அதிகம் பேசுவதை தவிர்ப்பவர் ஹீரோயின். அதிகம் பேசுகிற ஹீரோவை ஹீரோயினுக்கு பிடித்துவிட, அதிகம் பேசாத ஹீரோயினை ஹீரோவுக்கு பிடித்துவிட என காட்சிகள் நகர்ந்தாலும் காதலை சொல்லாமல் இருக்கிறார்கள். காரணம் ஹீரோயின் நஸ்ரியாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகியிருப்பது. அனைத்தும் கடந்து காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள். பனிமலையில் உள்ள நோய்க்கு மருந்து எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பது படத்தின் க்ளைமாக்ஸ்!

இதெல்லாம் எந்த ஊர்லயா நடக்குதுன்னு கேட்கிற அளவுக்கு, ஏகத்துக்கும் ரீல் விடுகிறார் இயக்குனர். சரி, எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்திருக்கிறோம். அதுக்கு இது பரவாயில்லை என்ற மனநிலையோடு தான் படம் பார்க்க வேண்டும்.

அமைச்சராக வரும் பாண்டியராஜனும், சினிமா நடிகராகவே வரும் ஜான் விஜய்யும், குடிகார சங்க தலைவராக வரும் ரோபோ ஷங்கரும் சில இடங்களில் வயறு குலுங்க சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் மொக்கை போடுகிறார்கள். ‘இயக்குனர் கொஞ்சம் கூட யோசிக்கலையா?’ என்ற கேள்வியை சின்னபுள்ளத் தனமான பல காட்சிகள் கேட்க வைக்கிறது.

படத்தில் ஒரு அழகான காதல் இருக்கிறது, டுல்கர் சல்மானும், நஸ்ரியா நசீமும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். பேச்சு வராமல் போன நேரத்தில் செய்கையால் பேசிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்கவைக்கிறது. மற்ற விஷயங்களை கொஞ்சம் குறைத்துக்கொண்டு இவர்களின் காதலை இன்னும் அழகுபடுத்த ஏனோ இயக்குனருக்கு மனம் வரவில்லை.

வாயை மூடி பேசவும் - அளவுக்கு மீறிய கற்பனை!

cinema.nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer