Friday, April 25, 2014

பின்புலம், பக்கபலம் இவைகளையெல்லாம் கொண்டு ஒரு ஊடகம் கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை போன்ற உண்மை நிகழ்ச்சிகளை நடத்துவது மிக எளிதான காரியம்தான். அதேவேளை இந் நிகழ்ச்சி குறித்த சந்தேகங்களும், கடுமையான விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன. ஆனால் இதற்கு அப்பாற்பட்டு,

தன்னந்தனியாக ஒரு பெண் எந்தப் பரபரப்புமில்லாமல், கடந்த 10 வருடங்களாக இது போன்ற, மற்றும் இதற்கு மேலுமான சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் எனும் போது அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா? அவர் பெயர் திருமதி மல்லிகா சூரி. சந்தித்தோம்.. இவரிடம் பேசியபோது..

"எனக்கு சொந்த ஊர் மதுரை. அப்பா லாயரா இருந்ததுனால எனக்கு நிறைய நீதிக்கதைகள் சொல்லித்தான் வளர்த்தார். அப்போ நீதி என்ன என்பதுதான் என் மனதில் மிக ஆழமாகப் பதிவான விஷயமாக  இருந்தது. அந்தக் கதைகள் எனக்கு நிறைய தைரியத்தையும் கற்றுக் கொடுத்து இருந்தது. அப்பவே, ரோட்டில் ஏதாவது அநியாயத்தைக் கண்டால்  உடனே தட்டிக் கேட்பேன். இந்த தைரியம் பின்னாளில் பல பேரின் வாழ்க்கையை சீராக்கிக் கொடுக்கும்படி என்னை வளர்த்து விட்டிருக்கிறது." என்கிறார் மல்லிகா.

வாழ்க்கையை சீராக்குவது என்றால் எப்படி..?

"நான் ஒரு சமூக சேவகி என்று யாரிடமும் என்னை அடையாளப் படுத்திக்கொண்டு எனது சேவை தொடரவில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு நானாக முன்னின்று உதவி செய்ய ஆரம்பித்தேன். அவர்களுக்கு நீதியும், நியாயமும் பெற்றுத் தந்தேன். அவர்கள் சட்டத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நான் பயப்படாமல் சட்டத்தை மேலும் துணை வைத்து அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தருவேன். இந்த விஷயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதிமன்றம், காவல்துறை வரை கூட தனி ஒரு பெண்ணாக சென்று நியாயம் பெற்றுத் தந்திருக்கிறேன். இப்படி என்னால் பயன் அடைந்தவர்கள் மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் என்னைப்பற்றி சொல்லும் போது, அவர்களும் என்னைத்தேடி வர ஆரம்பித்தார்கள். இப்படித்தான் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை சீராக்கிக் கொடுத்து  இருக்கிறேன்." என்று கூறும் மல்லிகாவின் கணவர் சூரி ஒரு பிசினெஸ் மேன்.மல்லிகாவும் பிசினெஸ் செய்கிறார், தாம் சம்பாதிப்பது பிறருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நல்ல கொள்கையும் வைத்து இருக்கிறார். இந்த கொள்கையின் காரணமாக நோய் பாதிப்புக்கு உள்ளான ஆன், பெண், குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, குழந்தைகளுக்கு கல்வி உதவி, அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு தம்மால் முடிந்த உதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி, வயதான முதியவர்களுக்கு தம்மால் முடிந்த உதவி என்று இவரது உதவி செய்யும் கரங்கள் இன்னும் இன்னும் என்று நீண்டுக் கொண்டே செல்கிறது.

இத்தனை வருட கால சர்வீசில் தம்மால் அதிகம் பயனடைந்தது குழந்தைகளும், ஆண்களும்தான் என்று கூறும் மல்லிகா, "ஆண்களுக்கு எந்தவிதக் கஷ்டமும் இல்லை என்று மேம்போக்காக சொல்லி விடுகிறோம். ஆனால் உண்மையில் அதிக ஆண்களுக்கு இப்படிப்பட்ட உதவிக் கரங்கள் தேவைப்படுகிறது. குடும்ப  சூழலில் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்ட எத்தனையோ ஆண்களின் வாழ்வுரிமையை நான் மீட்டுத் தந்து, அவர்களை  குடும்பத்துடன் நன்றாக வாழ  வைத்திருக்கிறேன். சொல்லப் போனால் என்னிடம் உதவி பெற்றவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம். இதில் ஒரு பெண்ணாக எனக்குப் பெருமைதான். ஒரு ஆணை வாழவைப்பதன் மூலம் ஒரு குடும்பத்தையே காத்த பெருமை ஒரு பெண்ணாக எனக்கு கிடைக்கிறது எனும்போது, இந்த இடத்தில் பெண்ணின் பெருமை உசத்திதானே?" என்று கேட்கிறார் மல்லிகா.இதையெல்லாம் விட முத்தாய்ப்பாய் ஒரு விஷயத்தை செய்து வருகிறார் மல்லிகா. கேட்டால் அசந்துதான் போவீர்கள். " எனக்கு ஃபிரண்ட்ஸ் அதிகம். அவர்கள் வீட்டில் ஒரு விஷேசம் என்றால் எனது பரிசு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். பிறந்தநாள், திருமண நாள், யாருக்கேனும் திதி, அல்லது குழந்தைகள் நிறைய மார்க் எடுத்துள்ளார்கள், அலுவலகத்தில் பிரமோஷன் என்று அவர்கள் வீட்டில் எது நடந்தாலும் என்னுடைய பரிசு என்பது முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்குவது  என்பதுதான்.

அதுவும் நான் ஏற்பாடு செய்து விஷேஷத்துக்கு உரிய நபரின் கையால் சரியான நேரத்துக்கு உணவு பரிமாற என்று அழைத்து செல்வது என்பது எனது அன்றைய பொறுப்பாகிவிடும். வயதானவர்கள் சரியான நேரத்துக்குசாப்பிட வேண்டும் என்பதால் நேரம் தவறாமை என்பது மிக முக்கியம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு, விஷேஷத்துக்கு உரியவர்களை வாழ்த்தும்போது அவர்கள் அடையும் ஆனந்தத்தைப் பார்ப்பது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, இதை எனக்கு அறிமுகமாகும் நபர்கள் எனக்குப் பிடித்திருந்தால் அவர்களுக்காக உடனடியாக செய்வேன்." என்று கூறுகிறார் மல்லிகா.

பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை வழங்குவது, உணவுத் தட்டுக்கள் வழங்குவது, செருப்புக்கள் வழங்குவது..முதியோர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது..நோயாளிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர உதவி செய்வது என்று எதை செய்தாலும் அடுத்தவரிடம்  கூறிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. எனவே, இதை எல்லாம் புகைப்படம் கூட இதுவரை எடுத்து வைத்துகொள்ளவில்லை என்று கூறுகிறார். சட்டத்தால் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் என்று யாருக்கேனும் உதவி செய்ததில் பல மிரட்டல்களையும் சந்தித்து இருக்கிறேன். என்றாலும் அஞ்சாமல் எனது இந்த சேவையை ஒரு சவாலுடன் பின்வாங்காமல் செய்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.எதிர்காலத்தில் உலகமே அறியாத குழந்தைகளுக்கும்,  உலகத்தை மறந்து முதுமையில் திளைத்து இருக்கும் முதியவர்களுக்குமாக ஒரு பெரிய டிரஸ்ட் அமைத்து, அதற்காக உழைக்க வேண்டும் என்பதுதான் தமது லட்சியம் என்று கூறுகிறார் திருமதி மல்லிகா. இவருக்கு கார்த்திகேயன் என்று கல்லூரிப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

ஒரு பிசினெஸ் பெண் என்பதால், தாம் எந்த ஒரு வேலையையும் சவாலாக எடுத்துக் கொண்டு ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்று, அந்த வேலையை வெகு சுலபமாக முடித்து வெற்றி பெறுவேன் என்று சவாலாகவே கூறுகிறார் மல்லிகா.  ரியல் எஸ்டேட்  துறையில் இவருக்கு சவாலாக இருப்பவர்களை எளிதில் வீழ்த்தி ஜெயித்து விடுவாராம்.  தாம் பங்கேற்று இருக்கும் லயன்ஸ் கிளப் மூலமும் எண்ணற்ற பல நலத்திட்டங்களை செய்து வருவதாக இவர் கூறுகிறார்.மல்லிகாவுக்கு அந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் சின்ன ஜெயலலிதா. குழந்தைகள் இவரை பார்த்துவிட்டால் சின்ன அம்மா என்று செல்லமாக அழைத்து மொய்த்துக் கொள்வார்களாம். மக்களின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் மல்லிகாவுக்கு, சென்னை இலக்கியப் பேரவை சார்பில் கௌரவ விழாவும் எடுத்து அவரை சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விழாவுக்கு அவரது பகுதி மக்கள் அனைவரும் வந்து வாழ்த்தி இருந்தது பார்க்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. தம்மை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் மல்லிகா.

4தமிழ் மீடியா

0 comments :

Post a Comment

 
Toggle Footer