Monday, March 24, 2014

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தை பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அபி சரவணன் என்ற புதுமுகத்தை ஹீரோவாகவும், காயத்ரி என்ற புதுமுகத்தை ஹீரோயினாகவும் வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் அவருக்கு இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்திருக்குமோ தெரியாது. ஆனால் படத்தில் நடித்திருக்கும் இந்த ஜோடிகளுக்கு செம அனுபவம். எப்படி?

முதலில் படத்தின் கதையை பார்ப்போம். கட்டினால் கேரள பெண்ணைதான் கட்டணும் என்று லட்சியத்தோடு வாழும் ஹீரோவின் அப்பாவுக்கு வாழ்வில் கிடைத்தது பெருத்த ஏமாற்றமே. நமக்குதான் கிடைக்கவில்லை. நமது மகனாவது ஒரு கேரள பெண்ணை திருமணம் செய்யட்டுமே என்று குழந்தை பருவத்திலிருந்தே அவன் மனதில் அந்த ஆசையை ஊட்டுகிறார் அவர். மகனும் வளர்ந்து பெரியவனாகி கேரளாவுக்கு கிளம்புகிறான். அவன் நினைத்த மாதிரி அங்கு ஒரு கேரள பெண் கிடைத்தாளா என்பதுதான் க்ளைமாக்ஸ். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தின் கதையில் ஒன்றிப் போன அபிசரவணன் தனக்கு ஜோடியாக நடித்த காயத்ரியிடம் மனதை பறிகொடுத்துவிட்டார். இத்தனைக்கும் இந்த படத்தில் காயத்ரியையும் சேர்த்து மூன்று கதாநாயகிககள். அதில் காயத்ரியிடம் மட்டும் எப்படி மனதை பறிகொடுத்தாராம் அபி?

டைரக்டர் எஸ்.எஸ்.குமரனிடம் விசாரித்தால், ‘நான்தான்ங்க தப்பு பண்ணிட்டேன்’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார். ரெண்டு பேருமே புதுசாச்சா? அவங்களுக்குள்ளே ஒரு கெமிஸ்ட்ரி வரணும்னு நினைச்சேன். ரெண்டு பேரும் நன்றாக பழகுவதற்குள் காதல் காட்சிகளை எடுத்தால் அவங்களுக்கு நடுவில் ஒரு சின்ன வெட்கமும் தயக்கமும் இழையோடும். அதுவே ஸ்கிரின்ல அருமையா பிரதிபலிக்கும்னு நினைச்சேன். அதற்காக முதல் நாளே ரெண்டு பேரும் கிஸ் அடிக்கிற மாதிரி சீன் வச்சுட்டேன். இப்படி ஒரு காட்சியில் நடிக்கணும்னு சொன்னவுடன் அந்த பொண்ணு முகத்துல பயங்கர வெட்கம். சார்… எனக்கு ரொம்ப கூச்சமா இருக்குன்னா. அதான் எனக்கு வேணும்மான்னு வற்புறுத்தி நடிக்க வைச்சேன். நான் நினைச்சது எனக்கு ஸ்கிரின்ல கிடைச்சுருச்சு. ஆனால் அந்த வெட்கமும் காதலும் அன்றைய தினத்தோட போயிரும்னு பார்த்தால், புடிச்சது வம்பு’.

‘மறுநாள்ளேர்ந்து ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க போலிருக்கு. நான் பரபரப்புல கவனிக்கல. ஆனால் யூனிட்ல வேலை செஞ்ச மற்ற டெக்னீஷியன்கள் என்னோட காதை கடிச்சாங்க. அபி சரவணனை கூப்பிட்டு, ‘தம்பி இது முதல் படம். லவ்வு கிவ்வுன்னு விழுந்துராத. கேமிராவுக்கு முன்னாடிதான் இதெல்லாம் இருக்கணும். பின்னாடி இருக்கக் கூடாது’ன்னு அட்வைஸ் பண்ணிட்டு போயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, அதையெல்லாம் கேட்கிற நிலையில அவங்க ரெண்டு பேருமே இல்லேன்னு. நான் ஒரு பக்கம் படம் எடுத்துகிட்டிருந்தா, அவங்க ஒரு பக்கம் படம் ஓட்டிகிட்டு இருந்தாங்க. எப்படியோ படத்தை முடிச்சிட்டேன். இனி அவங்க தலையெழுத்து’ என்று ஒதுங்கிக் கொண்டார்.

அபிசரவணனின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டோம். இந்த விஷயத்தை பற்றி கேட்க ஆரம்பித்ததுமே, ‘சார்… இதை பெருசு படுத்தாதீங்க. நானும் காயத்ரியும் லவ் பண்ணுறது உண்மைதான். ஆனால் நானும் சரி, அவங்களும் சரி, இப்போ எங்க கேரியர்தான் முக்கியம்னு இருக்கோம். எங்க லவ் அவங்க வீட்ல தெரிஞ்சு பெரிய பிரச்சனையாகியிருக்கு. எங்க வீட்டிலேயும் பெரிய பிரச்சனை. எனக்கு சொந்த ஊர் மதுரை. எங்க குடும்ப பேக்ரவுண்ட் வேற ஜாதி பெண்ணையோ, மதத்தையோ அவ்வளவு சீக்கிரம் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. அதனால் நானே இந்த காதலை மறந்துடலாம்னு இருக்கேன்’ என்றார் வேதனையோடு.

ஆனால் இருவரும் ஒருவரையொருவர் மறக்க முடியாதபடி விளையாடிக் கொண்டிருக்கிறது விதி. ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தை பார்த்த ஒரு தயாரிப்பாளர், இந்த ஜோடி நல்லாயிருக்கே என்று நினைத்தாராம். உடனடியாக இருவரையும் தன் படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். பிரிவோம் என்று நினைக்கிற நேரத்தில் சந்திப்போம் என்று சேர்த்து வைத்திருக்கிறது விதி. அது நடத்தும் விளையாட்டுகள் இனிமேல் கிசுகிசுக்களாக தொடரும்.

இளஞ்ஜோடி அதை எப்படிதான் எதிர்கொள்ளப் போகிறதோ?

newtamilcinema

0 comments :

Post a Comment

 
Toggle Footer