Tuesday, December 24, 2013

‘குடி’ இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லையா என்று சமீபத்திய படங்களைப் பார்த்த பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அட போங்க பாஸ்... ’குடி’ இல்லாமல் தமிழ்நாட்டுல வாழ்க்கையே இல்லேங்கிற கதையால்ல இருக்கு! சரி நமக்கெதுக்கு அரசியல்!

ஜீவா, சந்தானம், வினய் மூவரும் சிறு வயது முதல் ‘திக்’ ஃப்ரண்ட்ஸ். அதுமட்டுமில்லை, இவர்கள் மூவரும் ஒரு லட்சியத்தோடு வாழ்கிறார்கள். வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இப்படியே மொட்ட பசங்களா இருப்போம் என்ற லட்சியம் தான் அது. அதற்கு முக்கிய காரணம் ஜீவாவிற்கு பெண்கள் என்ற சொல்லே பிடிக்காது. சிறு வயதில் வேரோவரை திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு சென்ற தன் அம்மாவின் மேல் உள்ள கோபம் தான் பெண்களை அவர் வெறுப்பதற்கு காரணம்.


இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார் என்பதால் தன் அப்பாவான நாசரிடமும் பேசுவதில்லை. இப்படி... ஜீவாவின் வாழ்க்கையே தன் நண்பர்களான சந்தானமும் வினயும் தான் என்று ஆகிவிடுகிறது.

விளம்பர கம்பேனி வைத்திருக்கும் ஜீவா மற்றும் நண்பர்கள் ஒரு பெரிய விளம்பரத்தை எடுத்து கொடுக்க அக்ரிமெண்ட் போடுகிறார்கள். அந்த விளம்பர வேலைகளில் உதவியாக  இருக்க ஒருங்கினைப்பாளராக நியமிக்கப்படுகிறவர் த்ரிஷா. அந்த விளம்பர படத்தில் நடிக்க தேர்வுசெய்யப்படுகிறவர் நம்பர் ஒன் மாடலான ஆண்ட்ரியா. விளம்பரதின் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வரும் ஆண்ட்ரியாவிடம் எரிந்து விழுகிறார் அந்த விளம்பர படத்தின் இயக்குனரான ஜீவா. யூனிடே தன்னைப் பார்த்து ஜொல்லு விட, ஜீவா மட்டும் கோபப்படுவதால், ஆண்ட்ரியாவுக்கு ஜீவா மீது ஒரு ‘க்ரஷ்’! ஜீவாவை இருக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்கிறார் ஆண்ட்ரியா, எதிர்பார்த்தபடியே பளாரென பதிலுக்கு கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ஜீவா.  


எல்லோரும் ஜீவாவை கடிந்துகொள்ள, நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை என ஜீவாவுக்கு த்ரிஷா சப்போர்ட் பண்ணுகிறார். இதற்கிடையில் கல்யாணம் பண்ணாம இருப்போம் என்று ஜீவாவுக்கு செய்த சத்தியத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு ஜீவாவின் பேச்சைமீறி கல்யாணம் செய்துகொள்கிறார்கள் சந்தானமும் வினயும். இனி யாரோடும் பேசுவதில்லை என முடிவெடுத்த ஜீவா, தன் கர்வத்தால் தனிமையில் தவிக்கிறார். இதற்கடுத்து ஜீவா எப்படி த்ரிஷாவை காதலிக்கிறார், பிரிந்த நண்பர்கள் எப்படி மீண்டும் சேர்கிறர்கள், தன் வாழ்வில் இதுவரை தந்தையோடு பேசாமல் இருந்த ஜீவா எப்படி தன் ஈகோ-வை தூக்கி எரிகிறார் என்பது மீதி படம். 


முதலில் பாராட்டு பெறுகிறவர் ஜீவா. கமர்ஷியல் படத்துக்கான எந்த விஷயமும் படத்தில் இல்லை என்று தெரிந்தும் முழுமையான உண்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். சந்தானம் வழக்கமான ரம்பங்களை தூக்கி தூரப்போட்டுவிட்டு சின்ன சின்ன சிரிப்பு வெடிகளை படம் முழுக்க வீசுகிறார். வினய் அதிகமாகவும் இல்லாமல், கம்மியாகவும் இல்லாமல் நியாமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சரக்கடித்துவிட்டு சந்தானம் தன் மனைவியிடம் செய்யும் அலப்பரைகள் புத்தம் புது கமெடி. நீண்ட நாட்கள் கழித்து வஞ்சனை வைக்காமல் சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். அந்த காட்சியில் டெக்னிகல் ஐடியாவைக் கொடுத்தவர்களுக்கு ஒரு சரக்கு பார்ட்டி வைக்கலாம். 

த்ரிஷா எந்தவித குத்தாட்டங்களும் இல்லாமல் குத்துவிளைக்கப்போல வந்து இளசுகளின் இதயங்களைப் பரவசப்படுத்துகிறார். சுவிஸ்சர்லாந்தில் வெள்ளை உடையில் வரும் த்ரிஷாவைப் பார்த்தால் பெருசுகளுக்கும் காதல் வரும், ஜீவாவுக்கு வராதா என்ன? ஆண்ட்ரியாவுக்கு பொருத்தமான கேரக்டர், திமிர் பிடித்த மாடல் நடிகையாக அசத்துகிறார். 


ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் கடலாய் விரியும் காட்சிகளில் அலைகளாய் அழகு சேர்க்கிறது. அனைத்து பாடல்களுமே மெலடி என்றாலும் இதயத்தை வருடி இதமாய் இசை மழை பொழிகிறார் ஹாரிஸ். தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் ஒளிப்பதிவளர் மதி, இதிலும் தெளிந்த நீரோடையாய் பிரமிக்க வைக்கிறார். 

பளிங்கு போல மின்னும் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சாமான்ய மக்களுக்கும் இந்த காட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற ஒரு குறையைத் தவிர படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. வாழ்வின் சின்ன சின்ன கோபங்களை விட்டுக்கொடுக்காத காரணத்தால் நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் இழந்துவிடுகின்றோம் என்பதை இதயத்திற்கு நெருக்கமன காட்சிகளின் மூலம் இதமாக படம்பிடித்து காட்டுகிறார் இயக்குனர் அஹமத். இன்னும் சிறந்த படங்களைக் கொடுக்க வாழ்த்துகள்!

என்றென்றும் புன்னகை - படம் பார்த்த பிறகும் புன்னகை நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை

0 comments :

Post a Comment

 
Toggle Footer